சோழவந்தான் பகுதி வயல்களில் நெற்பயிர்களை பாதுகாக்கும் எலி வலைகள் அமைப்பு

சோழவந்தான் : சோழவந்தான் பகுதியில் உள்ள வயல்களில் நெற்பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு பல இடங்களில் எலி இடுக்கி எனும் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.

சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் அதிக அளவில் நெல் பயிரிடப்படுவது வழக்கம். இங்கு கால்வாய், கண்மாய், கிணற்று பாசனம் மூலம் நெல் விவசாய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக காடுபட்டி, தென்கரை, மன்னாடி மங்கலம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பயிரிட்ட நெல் பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது.

இதே போல் எலிகளால் அதிக அளவில் நெல் வயல்கள் சேதாரமாகி வருகிறது. இதன் காரணமாக கடன் வாங்கி ெநல் பயிரிட்ட விவசாயிகள் கவலையில் தவித்து வருகின்றனர். பூச்சிகளால் ஏற்படும் நோய் தாக்குதல்களுக்கு தண்ணீர் கலந்து மருந்து அடிக்கும் விவசாயிகள், எலிகளுக்கு மருந்து வைப்பதில்லை. காரணம் எலிக்கு வைக்கும் மருந்தை உண்டு பறவைகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் இறந்து விடக்கூடாது என்பது காரணமாக உள்ளது.

இதனால் விவசாயிகள் தற்போது பழைய கால முறைப்படி எலி இடுக்கி எனும் வலைகளை அமைத்து அவற்றின் தொந்தரவை ஓரளவு கட்டுப்படுத்தி வருகின்றனர். இங்குள்ள வயல்களில் எலி இடுக்கி வைக்கும் பணிகளை செய்து வரும் தாமோதரன்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி கூறுகையில், எலி இடுக்கி வைக்கும் பணிகளை எனது தந்தை ராஜேந்திரன் 40 வருடங்களாக செய்து வந்தார். அவரைப்போலவே நானும் 10 வருடங்களாக இந்த பணிகளை செய்து வருகிறேன். எலிகளின் பாதிப்பு உள்ள எல்லா இடங்களிலும் இதை வைக்கலாம். இருப்பினும் தற்போது நெல் வயல்களில் தான் இவற்றை அதிகமாக வைத்து வருகிறேன்.

இதன்படி 80 இடுக்கிகள் அடங்கிய ஒரு கட்டுக்கு ரூ.350 கூலி கிடைக்கும். இந்த இடுக்கிகளை, அதிக பாதிப்பு உள்ள வயல் பகுதியில் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்க வேண்டும். முதல் நாள் காலையில் வைத்து மறுநாள் காலை அதை எடுத்தால், அதில் எலிகள் சிக்கியிருக்கும். பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். சில நேரங்களில் பாம்புகளும் இடுக்கியில் சிக்கி விடும் அபாயமும் உண்டு. தற்போது காடுபட்டி, புதுப்பட்டி பகுதியில் உள்ள வயல்களில் எலிகளை பிடிப்பதற்கான இடுக்கிகளை அமைத்து வருகிறேன்.

மூங்கில் தப்பைகளை முக்கோண வடிவில், சைக்கிள் டயர் உள்ளிட்ட ரப்பரால் இணைத்து பழைய காலத்தில் உருவாக்கிய வழிமுறையில் இந்த இடுக்கிகளை தயாரித்து பயன்படுத்துகிறேன். அதிக வருவாய் இல்லாவிட்டாலும், விவசாயிகளுக்கு உதவும் இந்த பணியை ஒரு தொண்டு போல் மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

Related Stories: