சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஓடைகளை உடனே தூர்வார வேண்டும்-மக்கள் கோரிக்கை

வத்திராயிருப்பு : சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஓடைகளை தூர்வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் மழைக்காலத்தில் பெய்யக்கூடிய மழை நீர் அடிவாரத்தில் இரண்டு பக்க ஓடைகளில் சென்று லிங்கம் கோயில் பகுதியில் உள்ள ஓடையில் சேர்ந்து கண்மாய்களுக்கு செல்கிறது. அடிவாரப் பகுதியில் உள்ள ஓடைகள் குறுகிய அளவில் உள்ளதால் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வரும் போது பல இடங்களில் உடைப்பு ஏற்படுகிறது. எனவே ஓடைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஓடைகளை அளவீடு செய்து தூர்வாராததால் தண்ணீர் முழுமையாக செல்ல முடியாமல் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் காலதாமம் ஏற்படுகிறது. லிங்கம் கோயில் பகுதி புதிய பாலத்தை ஒட்டி சிறிய தடுப்பணை கட்டினால் அந்தப் பகுதியில் தண்ணீர் தேக்குவதற்கும் அதோடு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் வழிவகுக்கும். அதே வேளையில் பொதுமக்கள் விடுமுறை காலங்களில் குளிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.

மக்கள் கூறுகையில், சதுரகிரி மலையில் இருந்து வரக்கூடிய ஓடைகளில் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றி தூர்வார வேண்டும். குறிப்பாக, லிங்கம் கோயில் பகுதியில் உள்ள ஓடையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக அகற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் சதுரகிரியில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் வரும்போது ஓடைகளில் தண்ணீர் உடைப்பு ஏற்படாமல் கண்மாய்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இதனால் உடனடியாக வருவாய்த் துறையினர் ஓடைகளை அளவீடு செய்து தூர்வாரும் பணிகளை செய்வதற்கான வேலைகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: