நத்தம் பகுதியில் பூத்துக் குலுங்கும் மாமரங்கள் மாம்பழங்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு-மகிழ்ச்சியில் விவசாயிகள்

நத்தம் : நத்தம் பகுதியில் மாமரங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குவதால் மாம்பழங்களின் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நத்தம் பகுதிகளில் காசம்பட்டி ,வத்திபட்டி, பரளி, புதுக்கோட்டை, செல்லப்பநாயக்கன்பட்டி ,மூங்கில் பட்டி, துவராவதி , சேர்வீடு, சமுத்திராப்பட்டி, குட்டுப்பட்டி, மணக்காட்டூர், செந்துறை, சிறுகுடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர்களுக்கும் மேல் மாமரங்கள் வைக்கப்பட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இவை ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே மகசூல் தரும். இந்த ஆண்டு கடந்த பருவ மழை காலங்களில் நல்ல மழை பெய்தது.

மேலும் மா மரங்களில் மருந்து தெளிப்பதற்கான தருணத்திலும் மழை தொடர்ந்து சாரலாக பெய்ததால் மாமரத்தில் மருந்து தெளிக்கும் பணி தாமதமானது. இந்நிலையில் மழை நின்று பனிபொழிவு காணப்பட்ட நிலையில் மருந்து தெளிக்கும் பணியினை விவசாயிகள் மேற்கொண்டனர். இதையடுத்து மாமரங்களில் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் பூத்த பூக்களிலிருந்து வெளிப்படும் புழுக்களை உண்ண அப்பகுதிகளில் மைனா, குருவி மற்றும் காகங்கள் போன்ற பறவைகள் இளம் காலை பொழுதில் கூட்டம் கூட்டமாக வந்து மாமரங்களை சூழ்ந்து காணப்படுகின்றன. இது குறித்து மா விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு பருவமழைக்காலங்களில் நல்ல மழை பெய்ததால் மரங்கள் செழிப்புடன் காணப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு மாமரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பூக்களில் உருவாகும் புழுக்கள் அதிகம் இல்லை. மேலும் இவற்றிலிருந்து பாதுகாக்கவும், பிஞ்சு பிடிக்கவும் மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மகசூல் அதிகம் பெறுவதற்கும் பழங்களில் சதைப்பற்று அதிகம் கிடைப்பதற்கும் தேவையான நேரத்தில் மழை பெய்தால் நல்லது. மேலும் இந்த ஆண்டு மாமரங்களில் மகசூல் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ற விலை கிடைப்பதற்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், சந்தைபடுத்துதலுக்கான வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: