எண்ணூர் கொற்றலை ஆற்றில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்

சென்னை: எண்ணூர் கொற்றலை ஆற்றில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

எண்ணூர் கொற்றலை ஆற்றில் மீனவர்களை பாதிக்கும் வகையில் வடசென்னை அனல்மின்நிலையம் உயர்மின் கோபுரங்கள் அமைத்துள்ளதால் அதனை கண்டித்து எண்ணூர் மீனவ மக்கள் நலசங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் படகில் நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடசென்னை அனல்மின்நிலையத்தில் ஏற்கனவே 1, 2 என அலகுகள் செயல்பட்டு வந்த நிலையில் புதியதாக 3வது அலகு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மின்னிணைப்பு பரிமாற்றத்திற்காக எண்ணூர் கொற்றலை ஆற்றில் அலையாத்தி காடுகள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் அலையாத்தி காடுகளை பாதிக்காத வண்ணம் மற்றும் ஆற்றை பாதிக்காத வண்ணம் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதாக ஏற்கனவே ஒப்பந்தம் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஆற்றின் நடுவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார்கள் எழுந்து வந்த நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என பலவகையான நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஆற்றை பாதியாக பிரிக்கும் வகையில் மணல் மேடுகள் அமைத்து அதன் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதையறிந்த அப்பகுதி மீனவர்கள் வடசென்னை அனல்மின்நிலையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரும் வெள்ளிக்கிழமைக்குள் தங்களை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபடா விட்டால் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: