கம்பத்தில் ரோட்டில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண் உட்பட 5 பேர் மீட்பு-மனிதநேய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவியுது

கம்பம் : கம்பத்தில் ரோட்டில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த ஒரு பெண் உட்பட 5 பேரை போலீசார் மீட்டு மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.தேனி மாவட்ட சுற்றுப்பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றனர். இவர்களது நிலைமையை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாய் இருக்கிறது. குடும்ப சூழ்நிலை, போதை வஸ்துகள், எல்லை மீறிய சிந்தனை, எதிர்பார்த்தது கிடைக்காததால் ஏமாற்றம், உறவினர்களால் சொத்துக்களை இழந்தவர்கள், பில்லி, சூனியம் என ஏதோ ஒரு வகையில் ஏற்பட்ட பாதிப்பால் மனநலம் பாதிக்கப்படுகின்றனர். உரிய சிகிச்சை எடுக்காமல், குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்டு, ரோட்டில் சுற்றித் திரியும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

உரிய நேரத்திற்கு உணவு கிடைக்காமல், உடல் நிலை பராமரிப்பின்றி, தெருக்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் உறங்குகின்றனர். அதிக மனஅழுத்தம் ஏற்படும் போது, சிலர் தகாத வார்த்தைகளால், மற்றவர்கள் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு திட்டுகின்றனர்.அரைகுறை கந்தல் ஆடையுடன் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூக விரோதிகளால் பாதிப்பு உள்ளது. கண்ட இடங்களில் உறங்கி, கழிவுநீரை குடித்து பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர்.

மனநோயாளிகள் ரோட்டின் குறுக்கு நெடுக்குமாக திரிவதால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மனிதநேயமிக்கவர்கள் சில நேரங்களில் உணவு வாங்கி கொடுப்பார்கள். வீதிகளில்அலங்கோலமாக திரிவதால் குழந்தைகள் அலறுகின்றனர். இரவு நேரத்தில் ஆங்காங்கே பூட்டிய கடைகள் முன் உறங்குகின்றனர். கொசுக்கடியில் பெரிதும் சிரமப்படுகின்றனர். பார்ப்பதற்கே பாவமாய் உள்ளது. இவர்களுக்கு அரசு ஏதாவது உதவி செய்ய முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கம்பம் புதிய பஸ்நிலையம், வ.உ.சி திடல், காந்திசிலை, பார்க்ரோடு, அரசு மருத்துவமனை, வாரச்சந்தை, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் சுற்றித்திரிகின்றனர். இவர்களில் சிலர் கையில் கம்பு, கற்கள் போன்றவற்றை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தனர். மேலும் ஓட்டல்,டீக்கடை, தெருவோர கடைகளில் வரும் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த போலீசார், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களை மீட்டு மனநல காப்பகத்திற்கு அனுப்பிவைத்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, உணவுகள் வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், கம்பம் நகர் பகுதியில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு மனநல காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் நேற்று கம்பம் தெற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில், எஸ்ஐ அல்போன்ஸ்ராஜா மற்றும் போலீசார்கள், பெரியகுளம் அரசு மனநல காப்பக மனநல ஆலோசகர் சபரிநாதன் குழுவினர் கம்பம் பகுதியில் சுற்றி திரிந்த ஒரு பெண் உட்பட 5 பேரை மீட்டு வேனில் ஏற்றி பெரியகுளம் அரசு மனநலம் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். போலீசாரின் இச்செயலுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: