வேலைவாய்ப்பை அதிகரிக்க ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படுமா?

*கம்பம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

கம்பம் : கம்பம் நகரில் ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் படிப்படியாக தொடங்கப்பட்டு குட்டி திருப்பூர் போல் செயல்பட துவங்கியது .இதையடுத்து டெய்லர், கட்டிங் மாஸ்டர்,அயனிங் மாஸ்டர், பேக்கிங் செக்சன், காஜா பட்டன் வேலைக்கு தொழிலாளர்களின் தேவை அதிகரித்ததால் உள்ளூரில் வேலை வாய்ப்பு அதிகரித்தது. இதையடுத்து வெளியூருக்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊரான கம்பத்திற்கு திரும்பினர். கம்பத்தில் தயாரான ரெடிமேட் சர்ட்டுகள் தமிழகம் மற்றும் கேரளா மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆயத்த ஆடை வடிவமைப்பில் நவீன இயந்திரங்கள் வேலைப்பாடு, டிசைனிங், எம்ப்ராய்டரிங், சலவை செய்யபட்ட சட்டைகள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தன. சாதாரண இயந்திரங்களை கொண்டு ஆடை தயாரித்த நிறுவனங்களால், வெளிமாநில ஆடை நிறுவனங்களுக்கு போட்டியாக சட்டைகளை தயாரித்து கொடுக்க முடியவில்லை. காரணம் அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு நிதி பற்றாக்குறை, வங்கிக்கடன் கிடைக்காமல் பொருளாதார சுமை ஏற்பட்டு நாளடைவில் படிப்படியாக ஆடை நிறுவனங்கள் மூடு விழாவை நோக்கி சென்றன. 200 நிறுவனங்கள் இருந்த இடத்தில் தற்போது 50 நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

வழக்கம் போல் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட தமிழக கேரள எல்லையான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்ட வேலைக்கு சென்று வருகின்றனர்.தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண்,பெண் தொழிலாளர்கள் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக ஜீப் வாகனம் மூலம் சென்று வருகின்றனர். கேரளா மாநிலத்திற்கு கொத்தடிமைபோல் வேலைக்கு செல்வதை தவிர்க்கும் விதமாக கம்பம் பகுதியில் ஆடை ஆயத்த பூங்கா அமைத்து ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு நவீன இய ந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு மாவட்ட தொழில் மையம் நடவடிக்கை எடுத்து உள்ளூரில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆடை உற்பத்தியாளர் சம்சுதீன் கூறுகையில், ‘‘தையல் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது.இதனை போக்க கம்பத்தில் பெண்களுக்கான அரசு தையல் பயிற்சி மையம் துவங்க வேண்டும். பெண்கள் தையல் வேலை கற்றுக்கொள்ளும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.400 வரை சம்பாதிக்கலாம். ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மாவட்ட தொழில்மையம் நிதி உதவி வழங்க வேண்டும்.’’ என்றார்.

பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு

ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு அதி நவீன இயந்திரங்கள், பிணை இல்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கம்பம் பகுதியில் ஆயத்த ஆடை பூங்கா மற்றும் சிட்கோ அமைக்க வேண்டும். ஆயத்த ஆடை பூங்கா அமையும் போது 500க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட துவங்கும்.

இதன் மூலம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் உள்ளூரில் ஆடை உற்பத்தி மூலமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும்.-ராஜகணேசன், கம்பம் வட்டார ஆடை தயாரிப்பாளர் மற்றும் வியபாரிகள் சங்க தலைவர்.

Related Stories: