கூடலூரில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி விற்ற 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது

கூடலூர் : கூடலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்து, பைக் மற்றும் ரூ.26 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும், போதை தடுப்பு பிரிவில் அதிக கவனம் செலுத்தத் துவங்கினார். இதன்காரணமாக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை மீதும், கஞ்சா விற்பனை செய்வோர் மீதும் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார்.

இதன்படி, தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணிa, பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் இத்தகைய குட்கா, கஞ்சா ஒழிப்பு பணியில் மாவட்ட போலீஸ் எஸ்.பி பிரவீன்உமேஸ் டோங்கரே தலைமையில், தேனி மாவட்ட போலீஸ் துரிதமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான எட்டு மாதங்களில் போதை ஒழிப்பு பணியில் அரசு தீவிரம் காட்டியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த பாண்டியன் மகன் பிரபு என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, கூடலூரில் வீட்டில் பதுக்கி வைத்து, வேறுசிலர் மூலம் விற்பனை செய்வதாக கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் எஸ்ஐ பாலசுப்ரமணியம் உட்பட போலீசார்கள் நேற்று மாலை கூடலூர் வடக்குரத வீதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒருவீட்டு வாசலில் பைக்குடன் நின்றிருந்த 2 வாலிபர்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில்கூறியதால், அவர்களது பைக்கை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த சபரிமணி (25) மற்றும் திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த அருண்பாண்டி(26) என்பதும், கஞ்சாவை கூடலூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த நவீன்குமார் மனைவி ரஞ்சிதாவிடம் வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த ரஞ்சிதா (26), கூடலூர் வடக்குரதவீதி ரங்கநாதன் மனைவி முருகேஸ்வரி (47), மகன் ரஞ்சித்குமார் (24), கூடலூர் கள்ளர்மடத்து தெருவைச் சேர்ந்த பிரபு (38), அவரது மனைவி சிவரஞ்சனி (27) என 3 பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்த பயன்படுத்திய பைக் மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ.26 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: