சுற்றுலா பயணிகளை கவரும் சிறு தானியங்கள் கண்காட்சி அரங்கு

ஊட்டி :  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறு தானியங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ள அரங்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. உலக அளவில் சிறு தானிய உற்பத்தியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் உணவு சந்தையில் சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பதுடன், அதனை பதப்படுத்துவதற்கும், சுழற்சி முறை பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமையும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களிடையே சிறு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறு தானியம் தொடர்பான அரங்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. அந்த அரங்கில் நீலகிரி மாவட்டத்தின் வரைபடம், சர்வதேச சிறு தானிய ஆண்டை குறிக்கும் வாக்கியம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வரைபடத்தில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் விளை பொருட்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் கோதுமை, சம்பா கோதுமை, அரைகீரை,

மூங்கில் அரிசி, உள்ளூர் பீன்ஸ் விரை, காகி அவரை, பட்டானி, கம்பு, ராகி, சாமை, தினை, வரகு, குதிரைவாலி உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதுதவிர பாரம்பரிய நெல் வகைகளான கருங்குவளை, பூவரசி, சொியகுஞ்சன், கருப்புகவனி, பாலூட்டி, மலபார், மலையூரி, பூம்பூகார், சொர்ணமணி, தவளைகண்ணன், கண்ணகி, ஆரியன், கந்தகசாலா உள்ளிட்ட பல்வேறு நெல் ரக கதிர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொகொ, கிராம்பு, லவங்கபட்டை, சுக்கு, நட்சத்திர சோம்பு உள்ளிட்டவைகளும் இடம்பெற்றிருந்தன. இந்த அரங்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இவற்றை தாவரவியல் பூங்காவிற்க வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து செல்வதுடன், அவற்றின் விவரங்கள் குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர்.

Related Stories: