4 முறை மயக்க ஊசி செலுத்தியும் தப்பிய கருப்பன் யானை கும்கிகள் ஏற்றிய லாரியை வழிமறித்து விவசாயிகள் போராட்டம்

*மயக்க மருந்து இருப்பில் இல்லை என விளக்கம்

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் கடந்த சில மாதங்களாக கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அந்த யானையை வனத்துறையினர் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என மலைப்பகுதி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கலீம், கபில்தேவ், முத்து என 3 கும்கி யானைகள் தாளவாடி மலைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கருப்பன் யானையை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கருப்பன் யானைக்கு 4 முறை மயக்க ஊசி செலுத்தியும்,  சிக்காமல் போக்கு காட்டியது. இந்த நிலையில் நேற்று திகினாரை ரங்கசாமி கோவில் பகுதியில் இருந்த கும்கி யானைகளை பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமிற்கு கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றினர். இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து கும்கி யானைகளை, கருப்பன் யானை பிடிக்கும் பணி முடிவடையாமல் கொண்டு செல்லக்கூடாது எனக்கூறி கும்கி யானை கலீம் ஏற்றப்பட்ட லாரியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தாளவாடி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானை பிடிப்பதற்கு தேவையான மயக்க மருந்து தற்போது இருப்பில் இல்லாததால் பிப்ரவரி 6ஆம் தேதி மருந்து கொண்டு வரப்பட உள்ளதாகவும், பின்னர் கருப்பன் யானையை பிடிக்கும் பணி தொடங்கப்படும் எனவும், அதுவரையில் இங்கு இருக்கும் மூன்று யானைகளை பொள்ளாச்சிக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும், இதற்கு பதிலாக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகள் கொண்டு வரப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: