ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தேர்தல் பணிக்குழு தலைவருமான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை விவகாரத்தில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறோம் என்று கூறினார். பாஜக தனித்து போட்டியிடுமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று செங்கோட்டையன் பதில் அளித்தார். அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இடைத் தேர்தலை அதிமுக முதன்முறையாக சந்திக்கிறது.

98.5 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்புமுனையாக அமையும்.  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று கூறினார். வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஏன் என்ற கேள்விக்கு, வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது என்று செங்கோட்டையன் பதில் அளித்தார்.

Related Stories: