'தேசியவாதத்தால் தங்களது மோசடியை அதானி குழுமம் மறைக்க முடியாது': ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி

வாஷிங்டன்: தேசியவாதத்தால் தங்களது மோசடியை அதானி குழுமம் மறைக்க முடியாது என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை அதானி குழுமம் கடந்த 10 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு, பொய்கணக்கு, பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியது உள்ளிட்டவற்றை வெளிச்சம்போட்டு காட்டி அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் ஆட்டம் கண்டன. 2 நாட்களில் அதானி குழுமப் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் சரிந்தது. ஏறக்குறைய அதானி குழுமத்துக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல், இந்த நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்கள் என்று அதானி குழுமம் 413 பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அதானி குழும விளக்கத்துக்கு ஹிண்டன்பர்க் பதிலடி கொடுத்துள்ளது. அதில், புகார்களுக்கு விளக்கம் தராமல் இந்தியா மீது தாக்குதல் என்று அதானி குழுமம் கூறியது கவனத்தை திசைதிருப்பும் முயற்சி. தங்கள் குற்றச்சாட்டுக்கு அதானி குழும விளக்கத்தை ஏற்கவில்லை என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

இந்தியாவின் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு நாட்டை கொள்ளை அடிக்கும் முயற்சியில் அதானி குழுமம் ஈடுபடுகிறது. 413 பக்க அதானியின் அறிக்கை 30 பக்கங்கள் மட்டுமே தங்கள் ஆய்வறிக்கைக்கு விளக்கம் அளிப்பதாக உள்ளது. முறைகேடுகளுக்கு சம்பந்தம் இல்லாத தகவல்களை திணித்து இருக்கிறார்கள். 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு எந்த பதிலையும் அதானி குழுமம் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் குழுமத்தில் அதிக பங்கு வைத்திருப்போர் பற்றி தெரியாது என அதானி குழுமம் கூறியிருப்பதை ஹிண்டன்பர்க் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories: