எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி விமான பயணி மீது வழக்குப்பதிவு

மும்ப:  மும்பை சென்ற விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தின் அவசரகால கதவை கர்நாடக பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேஜஸ்வியுடன் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையும் பயணித்தார்.

தேஜஸ்வி விமானத்தின் அவசர கால கதவை தவறுதலாக திறந்துவிட்டதாகவும், இதற்காக அவர் மன்னிப்புகேட்டதாகவும் ஒன்றிய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். இந்நிலையில், நாக்பூரில் இருந்து மும்பைக்கு நேற்று இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக தாழ்வாக பறந்தது. அப்போது ஒரு பயணி விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்தார்.

அவசர கால கதவை திறப்பதற்கான பகுதி கவர் மூலம் மூடப்பட்டிருந்த நிலையில் அந்த கவரை விலக்கி கதவை திறக்க பயணி முயற்சித்தார். இதை கண்ட விமான ஊழியர்கள் உடனடியாக கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, விமானம்  பத்திரமாக மும்பையில் தரையிறங்கியது. விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: