வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 2 சுங்க சாவடிகள் அமைக்க முடிவு

சென்னை: நிர்வாக பராமரிப்பு வசதிக்காக வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 2 சுங்க சாவடிகளை அமைக்க நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார். நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60 கி.மீ. தூரத்துக்கு வெளி வட்டச் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வழியாக திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டி சாலை, மீஞ்சூர் ஆகியவற்றுடன் இணைக்கிறது.

இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வேண்டுகோளின் படி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முதல் மாநில நெடுஞ்சாலை இதுவாகும். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 2 சுங்கச் சாவடிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி, பழவேடு, சின்ன முல்லைவாயல் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் சுங்க சாவடி அமைகிறது. இப்பகுதிகளில் வசிப்பவர்களின் வணிகம் அல்லாத வாகனங்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.

Related Stories: