தொடர் கைவரிசை: பிரபல பைக் திருடன் கைது

திருவொற்றியூர்: மணலி செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (45). இவர், மாத்தூர் 3வது தெருவில் உள்ள கடைக்கு  பொருட்கள் வாங்க தனது பைக்கில் சென்றார். அங்கு, கடையின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு, பொருட்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிந்தது. உடனே, நண்பர் உதவியுடன் அக்கம் பக்கத்தில் உள்ள சாலைகளில் தேடியபோது, அங்குள்ள உள்ள ஒரு மெக்கானிக் கடையில் அவரது பைக்கின் நம்பர் பிளேட் அகற்றப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை கண்டார்.

உடனே, மெக்கானிக்கிடம் விசாரித்தபோது, மாத்துரை சேர்ந்த பாண்டியன் (எ) மாயகிருஷ்ணன் (32) என்பவர், நம்பர் பிளேட்டை மாற்றும்படி கடையில் நிறுத்திவிட்டு சென்றதாக கூறினார்.

இதுகுறித்து நாகேந்திரன் மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் வந்த போலீசார், மெக்கானிக் கடையில் இருந்த  பைக்கை எடுக்க வந்த பாண்டியனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பாண்டியன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: