பிரதமர் மோடி பெருமிதம் உலகை ஆச்சரியப்படுத்தும் உத்திரமேரூர் கல்வெட்டுகள்

புதுடெல்லி: ‘உத்திரமேரூர் கல்வெட்டில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பே கிராமசபை தேர்தல் பற்றிய அரிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பது உலகையே ஆச்சரியப்படுத்தக் கூடியது’ என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.

அவர் நேற்றைய தனது உரையில் கூறியதாவது:

‘இந்தியா - ஜனநாயகத்தின் தாய்’ என்ற நூலில் பல சிறந்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஜனநாயகம் நமது நாடி நரம்புகளில் நமது கலாச்சரத்தில் உள்ளது. இயல்பிலேயே இந்தியா ஒரு ஜனநாயக சமூகம். தமிழகத்தின்  புகழ்பெற்ற கிராமமான உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டில் கிராம சபை தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 1110-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு. இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியல் சாசனம். இது உலககையே ஆச்சரியப்படுத்தக் கூடியது. நமது நாடு ஜனநாயகத்தின் தாய் என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கின்றனர்.

இந்த ஆண்டு பத்ம விருதுகள், மக்களின் பத்ம விருதாக அமைந்துள்ளது. அதில், பல பழங்குடியினத்தவர்கள், சமூகத்திற்காக பாடுபட்டவர்கள், இசை உலகை வலுப்படுத்தியவர்கள் இடம் பெற்றுள்ளனர். நாடுதான் முதன்மை என்ற கொள்கைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் அவர்கள். அவர்களைப் பற்றி மக்கள் படிக்க வேண்டும். அவர்களின் கதைகள் புதிய தலைமுறையை ஊக்குவிக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி டன் மின்னணு கழிவுகள் வீசப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை கூறியுள்ளது. அதாவது, ஒவ்வொரு நொடிக்கும் 800 லேப்டாப்கள் தூக்கி எறியப்படுவது போல் உள்ளது. மின்னணு கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க முடியும். இந்த துறையில்  புதுமையான பணிகளைச் செய்யும் ஸ்டார்ட்-அப்களுக்கு பஞ்சமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: