அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்திருப்பவர்கள் தவணை முறையில் செலுத்த ஏற்பாடு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மூலம் அடிப்படை கட்டமைப்புகள், தெரு விளக்குகள், பூங்காக்கள், சாலைகளை பராமரித்தல், பொது சுகாதாரம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் 24 ஆண்டுகளுக்கு பிறகும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகும் சொத்து வரி பொது சீராய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2022-23ம் நிதியாண்டில் சென்னையில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் சொத்து வரி செலுத்தி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர்.

இந்த நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சொத்து வரியை அதன் உரிமையாளர்கள் ஒவ்வொரு அரையாண்டுகளின் தொடக்கத்தில் முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சொத்துவரி வசூல் ரூ.1500 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சொத்து வரி உயர்த்தப்பட்டதால் வட்டி இல்லாமல் 2ம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த ஜனவரி 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இதுவரை 7 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1213 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 5 லட்சம் பேரிடம் இருந்து ரூ.287 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது. இந்த நிதியாண்டு வருகிற மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் சொத்து வரி செலுத்தாதவர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்த வேண்டும். சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்கள் எளிதில் சொத்து வரியினை செலுத்தும் வகையில் பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் தபால் துறை ஊழியர்கள், வரி வசூலிப்பாளர்களிடம் காசோலை, வரைவோலை, கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.

மேலும் இ-சேவை மையங்கள், சென்னை மாநகராட்சி இணையதளம், பே.டி.எம்., நம்ம சென்னை ஆகிய செல்போன் செயலிகள் மூலம் பரிமாற்ற கட்டணம் இல்லாமல் செலுத்தலாம். ‘பாரத் பில் பேமண்ட் சிஸ்டம்’ மூலமாகவும் சொத்து வரியை எளிதாக செலுத்த முடியும். மேலும், தவணை முறை அடிப்படையிலும் சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. தவணை முறை திட்டத்தை எச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது.

இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 சதவீதம் முதல் 8.6 சதவீதம் வரைக்கும் இருக்கும். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தவணை முறை திட்டத்துக்கு தகுதியானவர்கள் ஆவர். குறைந்த வட்டி விகிதத்தில் தவணை முறை திட்டத்தை செயல்படுத்த வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ரூ.6 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பவர்கள் தவணை முறையை பயன்படுத்தி வரி செலுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: