தண்ணீர் கசிவு காரணமாக சுரங்கப்பாதையில் வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அம்பத்தூர்: கொரட்டூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகே ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது. இதனை தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், இந்த சுரங்கப் பாதையின் பக்கவாட்டு சுவரில் இருந்தும் நீர் கசிவு ஏற்பட்டு, சாலையில் தேங்குவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.

குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவர்களும், பைக்குகளில் வேலைக்கு செல்பவர்களும் நிலை தடுமாறி சாலையில் விழுகின்றனர். சமீபத்தில், காவல்துறை அதிகாரி ஒருவரும் வழுக்கி விழுந்ததில் காலில் லேசான காயம் ஏற்பட்டது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த சுரங்கப்பாதை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த பாலம் அமைந்துள்ள இடத்தில் பெரிய கால்வாய் இருந்ததாக கூறப்படுகிறது. சுரங்கப்பாதையின் அருகே 500 மீட்டருக்கு தொலைவில் கொரட்டூர் ஏரி உள்ளது. இதை கவனத்தில் கொண்டு சுரங்கப் பாதை அமைத்து இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததால், தொடர்ந்து பக்கவாட்டு சுவரில் நீர் கசிவு ஏற்படுகிறது.

இதன் காரணமாக தரை வழுவழுப்பாக மாறி, வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவது தொர்ந்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த வாரம் மாநில நெடுஞ்சாலை துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சியினர் இணைந்து ஆய்வு செய்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீண்டும் விபத்து தொடர்ந்து வருகிறது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: