கத்தி முனையில் தொழிலதிபரிடம் ரூ.4 லட்சம் துணிகர கொள்ளை: வடசென்னை ரவுடி கைது

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மைதீன் ராவுத்தர் (37). தொழிலதிபரான இவர், கடந்த 20ம் தேதி தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இந்தியன் வங்கி எதிரே உள்ள தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணம் செலுத்த வந்தார். அப்போது தொழிலதிபரை 2 பைக்கில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென தொழிலதிபர் கழுத்தில் கத்தியை வைத்து அவர் வைத்திருந்த ரூ.4 லட்சம் பணம் உள்ள பையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத தொழிலதிபர் மைதீன்ராவுத்தர் உடனே சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இந்தியன் வங்கியின் எதிரே உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், பழைய வண்ணாரப்பேட்டை பெத்தானியா கார்டன் பகுதியை சேர்ந்த ஜான் ஜெய்சிங் (43) என தெரியவந்தது. இவன் மீது 3 கொலை, 7 கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 26 வழக்குகள் உள்ளதும், தொழிலதிபர் பணத்துடன் சென்றதை நோட்டமிட்டு பின் தொடர்ந்து தனது நண்பர்கள் 3 பேருடன் பின் தொடர்ந்து ரூ.4 லட்சத்தை வழிப்பறி  செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து பிரபல ரவுடியான ஜான் ஜெய்சிங்கை கைது செய்தனர். அவனிடம் இருந்து ரூ.4,300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: