பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரூ.10 லட்சம் கேட்ட ஐஸ்வர்யா தத்தா: இயக்குனர் கீரா புகார்

சென்னை: திரைக்கு வந்த ‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’, ‘எட்டுதிக்கும் பற’ ஆகிய படங்களை இயக்கி இருந்த கீரா தற்போது இயக்கியுள்ள படம், ‘இரும்பன்’. இதில் ஜூனியர் எம்.ஜி.ஆர் ராம், ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, சென்ராயன் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஐஸ்வர்யா தத்தா புறக்கணித்து விட்டார். இதுபற்றி கீரா கூறியதாவது: சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு ‘இரும்பன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினோம். அந்தமான் தீவுகளில் படப்பிடிப்பு நடந்தபோது நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

அதற்கும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு நடித்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்த அவர், படப்பிடிப்பு முடிந்த பின்பு, இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. படம் வெளியாகும் வரை இப்படத்துக்காக பணியாற்று வேன் என்று அவர் எங்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். அதற்காக பேசப்பட்ட சம்பளம் முழுவதையும் அவருக்கு கொடுத்தோம். ஆனால், உறுதி அளித்தபடி படத்துக்கான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அவர் வரவில்லை. பாடல் வெளியீட்டு விழா உள்பட எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.

பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என்று அழைத்தபோது, ‘நான் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றால், 10 லட்சம் ரூபாய் தருகிறார்கள். அந்தப் பணத்தை நீங்கள் தருவதாக இருந்தால், உங்கள் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்கிறேன்’ என்று சொன்னார். அந்தளவுக்கு எங்களிடம் பட்ஜெட் இல்லாததால் அவரை நாங்கள் அழைக்கவில்லை. பிறகு அவர் இல்லாமலேயே பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இப்படம் தணிக்கைக்கு சென்றபோது, ஒரு லிப்லாக் காட்சியை நீக்கச் சொன்னார்கள். படத்தின் நாயகி சுறா மீன் ரத்தம் குடிப்பது போன்ற ஒரு காட்சியையும் நீக்கச் சொன்னார்கள். உடனே அந்தக்காட்சிகளை நீக்கினோம். பிறகு யு/ஏ சான்றிதழ் அளித்தனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.

Related Stories: