அம்மிக்கல்லை தலையில் போட்டு பட்டப்பகலில் மூதாட்டி படுகொலை: 25 சவரன் கொள்ளை

சென்னை: பட்டப்பகலில், மூதாட்டியை அம்மிக்கல்லால் கடுமையாக தாக்கி படுகொலை செய்யப்பட்டார். மேலும், அவர் அணிந்திருந்த 25 சவரன் நகைகளை கொலையாளிகள் எடுத்துச் சென்றனர். சென்னை அடுத்த சுங்குவார்சத்திரம் அடுத்த மேலேரி கிராமம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் யசோதா (75). இவரது கணவர் பலராமன் கடந்த சில ஆண்டுகள் முன்பு இறந்துவிட்டார்.

இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் ஆகி சென்னை, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். யசோதா மட்டும் மேலேரி கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். எனினும், மகன், மகள்கள் அடிக்கடி தங்கள் தாயாரை பார்க்க அடிக்கடி வருவார்களாம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் யசோதா, வீட்டின் பின்புறம் அம்மிக்கல்லை தலையில் போட்டு படுகொலை செய்யப்பட்டு  கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியினர், சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், யசோதா மூன்று தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு சுமார் 25 சவரன் தங்க நகைகளை அணிந்து கொண்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யசோதாவின் நகைகளை கொள்ளை அடித்து, அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார்  சந்தேகிக்கின்றனர். வீட்டில் பதிவான கைரேகைகளை போலீசார் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக இருந்த மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: