தந்தையை அழைத்து செல்ல ஆசையாக வந்தபோது விபரீதம் துணிக்கடை கேட் விழுந்து சிறுமி உடல் நசுங்கி பலி: கடை மேலாளர் உட்பட 2 பேர் கைது

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் வேலை செய்யும், தனது தந்தையை அழைத்து செல்ல வந்தபோது, தாயின் கண் எதிரே கடையின் கேட் சரிந்து விழுந்ததில், 5 வயது சிறுமி உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் கீழ்ப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை நம்மாழ்வார்பேட்டை சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் சங்கர்.

இவர், கீழ்ப்பாக்கம் ஹர்லிக்ஸ் சாலையில் உள்ள பிஎம்எஸ் கட்டிடத்தின், தரை தளத்தில் உள்ள துணிக்கடையில் பார்க்கிங்கில் வேலை செய்து வருகிறார். வழக்கமாக சங்கர் வேலை முடிந்ததும், அவரது மனைவி வாணி வந்து அழைத்து செல்வது தான் வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வாணி தனது 5 வயது குழந்தை ஹரிணி ஸ்ரீயுடன் கணவர் வேலை  செய்யும் பிஎம்எஸ் கட்டிடத்தின் கேட் அருகே வந்து நின்று கொண்டிருந்தார்.

அப்போது கட்டிடத்தின் செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் சம்பத்(65) என்பவர் நீளமான கேட்டை மூடியுள்ளார். அப்போது தனது தந்தையை அழைத்து செல்ல ஆசையாக கேட் அருகே வெளிப்புறம் நின்று இருந்த ஹரினி ஸ்ரீ மீது, கேட் சரிந்து விழுந்தது.  இதில் சிறுமி ‘கேட்’ அடியில் சிக்கி உடல் மற்றும் தலையில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார். தனது மகள் மீது கேட் விழுவதை பார்த்த வாணி அலறி அடித்து கொண்டு இரும்பு கேட்டை தூக்க முயன்றார். ஆனால், கேட் அதிக பாரமாக இருந்ததால் அவரால் உடனே தூக்க முடியவில்லை.

பிறகு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கேட்டை தூக்கி காயங்களுடன் உயிருக்கு போராடிய மகளை வாணி தூக்கியபடி கதறி அழுதார். சத்தம் கேட்டு கடையில் வேலை செய்து இருந்து சிறுமியின் தந்தை சங்கரும் ஓடி வந்த கதறி அழுதார். சிறுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுயநினைவின்றி இருந்தார். பிறகு சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மகள் இறந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மருத்துவமனையிலேயே அழுது புரண்டனர்.

பின்னர் சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குபதிந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார் துணிக்கடையின் மேலாளர் சீனிவாசன் மற்றும் கேட் மூடிய செக்யூரிட்டி சம்பத் மீது ஐபிசி 279, 304(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  2 பேரை கைது செய்தனர். சிறுமி ஒருவர் கேட் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: