செயற்குழு கூட்டத்தில் மோதல் மண்டல பாஜ தலைவருக்கு சரமாரி அடிஉதை

சென்னை: பாஜ சென்னை மேற்கு மண்டல செயற்குழு கூட்டத்தில், மண்டல பாஜ தலைவரை நான்கு புறமும் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர் அடி தாளாமல் அலறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டம்தோறும் பாஜ செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று  அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில், சென்னை மேற்கு மண்டலம் சார்பாக செயற்குழு கூட்டம் நடந்தது.

இதில், பாஜவின் மாநில துணைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். இவ்விழாவில், பாஜ நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்பொழுது, திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்க முயன்றார். அப்போது மதுரவாயில் மேற்கு மண்டல தலைவர் கிருஷ்ணா எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நான் மேடையில் பேச வேண்டும். என் கருத்தை தெரிவிக்க ஒரு வாய்ப்பு தர வேண்டும் கேட்டு கூச்சலிட்டார்.

இதனால், செயற்குழு கூட்டத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்,  தொடர்ந்து மதுரவாயில் மேற்கு மண்டல தலைவர் கிருஷ்ணா பேச முற்பட்டபோது, எதிரே இருந்த பிரகாஷ் ஆதரவாளர்கள் ஐந்து பேர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்து சாரமாரியாக தாக்கினர். இதில் முகம், பல்,  கை ஆகிய இடங்களில் கிருஷ்ணாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால், அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

பின்னர், காயத்துக்காக சிகிச்சை பெற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பாஜ செயற்குழு கூட்டத்தில் மண்டல தலைவர் கிருஷ்ணா தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி யையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Stories: