சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை கலக்கிய பிரபல ரவுடி இளங்கோவன் பெங்களூரில் கைது : 3 பேரை கொன்று புதைத்த வழக்கில் குற்றவாளி

சென்னை: ராணிப்பேட்டையில் 3 பேரை கொன்று ஒரே குழியில் புதைத்த வழக்கு உட்பட 25க்கும் மேற்பட்ட வழக்கில், சென்னை உள்பட தமிழ்நாட்டை கலக்கிய பிரபல கொலையாளியும் ரவுடியுமான திருவல்லிக்கேணியை சேர்ந்த இளங்கோவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து பெங்களூரில் பதுங்கியதாக தகவல்கள் வெளியானது.  

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பைக் திருட்டு, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் திருவொற்றியூரை சேர்ந்த பிரபல ரவுடியான இளங்கோவன்(29) என்பவனை திருவல்லிக்கேணி போலீசார் பல்வேறு வழக்குகளில் ஓராண்டாக தேடி வந்தனர். கடந்த 2021ம் ஆண்டு பைக் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் இளங்கோவன் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்தான். பிரபல ரவுடியான இவன், தலைமறைவாகவே திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தனது ஆட்களை வைத்து தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான்.

இதையடுத்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், ஓராண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கரன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து கொலை, பைக் திருட்டு, வழிப்பறி உள்பட 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடியான இளங்கோவனை செல்போன் சிக்னல் உதவியுடன் கண்காணித்தனர். அப்போது எளா (எ )ரவுடி இளங்கோவன் பெங்களூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே துணை கமிஷனர் உத்தரவுப்படி தனிப்படையினர் பெங்களூரு விரைந்து சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன், ஓராண்டாக தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி இளங்கோவனை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர், அவனை நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, ரவுடி இளங்கோவன் ராணிபேட்டை மாவட்டத்தில் 2020ம் ஆண்டு 3 பேரை கொலை செய்து ஒரே குழியில் புதைத்த அதிர்ச்சி சம்பவம் வெளியானது. பைக் திருட்டில் தன்னை போலீசாருக்கு காட்டி கொடுத்ததாக நினைத்த இளங்கோவன், விழுப்புரத்தில் நண்பரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு வா  என கூறி சென்னையை சேர்ந்த ஆசிக் முகமது, விழுப்புரத்தை சேர்ந்த சூர்யா, நவீன் ஆகியோரை அழைத்து சென்றார்.

பின்னர், ராணிப்பேட்டை லாலாபேட்டை அருகே அனைவரும் மது அருந்தி உள்ளனர். பின்னர் மதுபோதையில் இருந்த இந்த 3 பேரை இளங்கோவன் தலைமையிலான 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து, அங்கேயே குழி ேதாண்டி புதைத்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் 10 மாதங்களுக்கு பிறகே வெளிய வந்தது. இதில், கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி, ஆள்கடத்தல், திருட்டு, வழிப்பறி கட்டப்பஞ்சாயத்து என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் திருவல்லிக்கேணி, அண்ணாநகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் போலீஸ் என்கவுன்டருக்கு பயந்து அவன் பெங்களூரில் பதுங்கி இருந்த தகவல் வெளியானது.

இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட ரவுடி இளங்கோவனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவன் மீது தொடர் குற்றங்கள் உள்ளதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான ஏற்பாடுகளை திருவல்லிக்கேணி போலீசார் எடுத்து வருகின்றனர்.

Related Stories: