வீட்டின் பூட்டை உடைத்து 63 பவுன் நகை கொள்ளை

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கருப்பூர் லிங்கபைரவி நகரில் வசிப்பவர் விஜயலட்சுமி (49). இவரது கணவர் ஞானசேகரன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கணவரை பிரிந்து மகள் அபிராமியுடன் (22) வசித்து வருகிறார். அபிராமி சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில், வீட்டை பூட்டி விட்டு, கடந்த 25ம் தேதி சென்னையில் உள்ள தனது தாய் மற்றும் மகளை பார்த்து வருவதற்காக விஜயலட்சுமி சென்றுள்ளார்.

அவரது வீட்டில் வேலை செய்யும், சேலம் குரங்குசாவடியை சேர்ந்த சித்ரா (40) என்பவர், நேற்று முன்தினம் மாலை வீட்டை சுத்தம் செய்து பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று மாலை, கருப்பூர் மேட்டுபதியை சேர்ந்த விஜயலட்சுமியின் கார் டிரைவர் சிவா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 63 பவுன் நகை, 2.5 கிலோ வெள்ளி கட்டிகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில், விஜயலட்சுமி சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து கருப்பூர் போலீசுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து  சென்று விசாரணை நடத்தினர். வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: