கோடியக்கரை, முத்துப்பேட்டை, புதுகையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 47 பேர் 12 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் ஆகிய பகுதியில் ஆண்டு முழுவதும் அதிகளவில் பறவைகள் காணப்படும். இப்பகுதிகளில் திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சதீஸ், மாவட்ட வன அலுவலர் அறிவொளி ஆகியோர் மேற்பார்வையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இதில் முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் ஜனனி மற்றும் வனத்துறையினர், பறவைகள் ஆராய்ச்சியாளர் பாலசந்திரன் தலைமையிலான 10 குழுக்களாக பிரிந்து மொத்தம் 50பேர் கொண்ட குழுவினர் கடற்கரை சார்ந்த ஈரநில பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இனப்பெருக்கத்திற்காக பல்வேறு நாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பறவைகள் வரத்து உள்ளது. இந்தநிலையில், இங்கும் பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று (29ம் தேதி) துவங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதையடுத்து, புதுக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட அன்னவாசல் கண்மாய், ஆரியூர் கண்மாய், அருவாக்குளம், கவிநாடு கண்மாய், அறந்தாங்கி வனச்சரகத்திற்குட்பட்ட பொன்பேத்தி ஏரி, செய்யானம் ஏரி, கரகத்திக்கோட்டை கண்மாய், முத்துக்குடா கடல், கோடியக்கரை கடல், பொன்னமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட காரையூர் காரை கண்மாய், ஒலியமங்கலம் கண்மாய், ஏனாதி கண்மாய், கொன்னை கண்மாய், கீரனூர் வனச்சரகத்திற்குட்பட்ட நீர்பழனி கண்மாய், ஔவையார்பட்டி கண்மாய், பேராம்பூர் கண்மாய், குளத்தூர் கண்மாய், திருமயம் வனச்சரகத்திற்குட்பட்ட தாமரை கண்மாய், பெல் ஏரி, நல்லம்மாள் சமுத்திரம் ஆகிய 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories: