கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை சீரமைக்க ஆரணி மக்கள் வலியுறுத்தல்

பெரியபாளையம்: ஆரணி பகுதியில் ஒரு அரசு கால்நடை மருத்துவமனை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி, சீர்குலைந்து இடியும் நிலையில் காணப்படுகிறது. மேலும், அவ்வளாகத்தை சுற்றி புதர்காடுகள் வளர்ந்துள்ளன. இவ்வளாகத்தை உடனடியாக சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகே கடந்த 2012ம் ஆண்டு ₹26.66 லட்சம் மதிப்பில் புதிதாக ஒரு அரசு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு ஆரணி, மல்லியங்குப்பம், மங்கலம், புதுப்பாளையம் என 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகும்போது, இங்கு வந்து சிகிச்சை அளித்து சென்று வருகின்றனர்.

இம்மருத்துவமனையின் முன்புறம் உள்ள பழைய கட்டிடம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து, கட்டிடத்தின் ஜன்னல்கள், சிமென்ட் மேற்கூரை ஓடுகள் உடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனினும், அங்கு மாடுகளுக்கு சினை ஊசி போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கட்டிடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் முட்புதர் காடுகள் ஏராளமாக வளர்ந்து, பல்வேறு விஷப்பூச்சிகளின் புகலிடமாக மாறிவிட்டது. மேலும், மருத்துவமனையின் சுற்றுச்சுவரில் கதவு இல்லாததால், இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் ஊடுருவி, இந்த பாழடைந்த கட்டிடத்தில் பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த பாழடைந்த கட்டிடத்தையும் முட்புதர் காடுகளையும் அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடத்தை கட்டி, மீண்டும் கால்நடை மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: