கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: காஞ்சிபுரம் அருகே 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையில்  இருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை பகுதியில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து குடிமைப்பொருள் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் ஆபாஷ்குமார், கண் காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையிலான அதிகாரிகள், காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை ரோட்டு தெருவில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் சோதனை நடத்தினர்.

அப்போது, கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக மினி லாரியில்  440 மூட்டைகளில் 12 டன் ரேஷன் அரிசி ஏற்றிவைத்திருந்தது தெரியவந்தது. மேலும் குடும்ப அட்டைதாரர்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அவற்றை பாலீஸ் செய்து கர்நாடக மாநிலத்துக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மினி லாரியுடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, பார்த்தசாரதி (32), உதயகுமார் (37), ராஜதுரை (24) ஆகியோரை போலீசார் கைது  செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: