ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலர் கைது

நெல்லை: சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி யூனியன், தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் தனது வீட்டு சொத்துவரியில் பெயர் மாற்றம் செய்ய தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்து செயலரான அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (51) என்பவரிடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரோ வீட்டு சொத்துவரியில் பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார்.

இதுகுறித்து சண்முகசுந்தரம் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை பஞ்சாயத்து செயலர் சொக்கலிங்கத்திடம் சண்முகசுந்தரம் நேற்று கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சொக்கலிங்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: