மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்ட தந்தை, மகனை சரமாரியாக தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்: விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்ட தந்தை, மகன் மீது அதிமுக ஒன்றிய செயலாளர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அருகே நல்லரசன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பேட்டை முருகன்(45), அதிமுக ஒன்றிய செயலாளர். அதே ஊரைச் சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் உதயசூரியன்(56) மற்றும் அவரது மகனான அதிமுக மேலவை பிரதிநிதி சதீஷ்(35) ஆகிய 2 பேரும் கடந்த அதிமுக ஆட்சியில் சத்துணவு பொறுப்பாளர் வேலைக்காக சில பேரிடம் பணம் பெற்று ஒன்றிய செயலாளரான பேட்டை முருகனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை கொடுத்தவர்கள் வேலை கிடைக்காததால் மீண்டும் கிளை செயலாளர் உதயசூரியனிடம் பணத்தை திரும்ப தருமாறு வலியுறுத்தியதால், உதயசூரியன் சில தினங்களுக்கு முன்பு பேட்டை முருகன் சென்ற காரை மறித்து பணத்தை திருப்பி கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பேட்டை முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்றிரவு 8.45 மணியளவில் அதிமுக கிளை செயலாளர் உதயசூரியன் வீட்டிற்குள் புகுந்து, என்னையே வழிமறித்து பணம் கேட்கிறாயா எனக் கூறி, உதயசூரியன் மற்றும் அவரது மகன் சதீஷ், அவரது மருமகன் அய்யனார் மற்றும் சரத்குமார், ஆகாஷ் ஆகிய 5 பேர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த உதயசூரியனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தையும், கிராமத்தில் நுழைய விடாமல் தடுத்து அனுப்பி உள்ளனர். மேலும் சொந்த வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்லவும் தடை செய்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான உதயசூரியனின் மகன் சதீஷ் விழுப்புரம் மாவட்ட எஸ்பியை செல்போனில் தொடர்பு கொண்டு, சம்பவத்தை எடுத்துக் கூறிய பின்பு, சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த வளவனூர் போலீசார் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வளவனூர் காவல் நிலைய போலீசார் பேட்டை முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களான வினோத்(32), கலையரசன்(30), ராஜ்(50), சிங்கம் (எ) பிரபாகரன் (48),  சீனு(43) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: