விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் கோரி: சேலத்து இளைஞருக்கு குவியும் பாராட்டு

விருதுநகர்: விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் கோரி 3,600 கிமீ மாட்டுவண்டியில் பயணம் மேற்கொண்டு வரும் சேலத்து இளைஞரை பாராட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சூரியன்(35). விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக சொந்த ஊரிலேயே கடந்த 10 வருடங்களாக 4 ஏக்கர் நிலத்தில் பருத்தி, கத்திரி, கரும்பு, நெல் என மாற்று விவசாயம் செய்து வருகிறார்.

இளைய தலைமுறை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்; விளைபொருள்களுக்கு உரிய விலையை ஒன்றிய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றை மாடு பூட்டிய மாட்டு வண்டியில் பயணத்தை துவக்கி உள்ளார். நேற்று விருதுநகர் வந்த இவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த ஜன.1ல் கன்னியாகுமரியில் இருந்து மாட்டு வண்டி பயணத்தை துவக்கி, 3,600 கிமீ மாட்டு வண்டியில் பயணம் செய்து காஷ்மீரை 8 மாதங்களில் சென்றடைய முடிவு செய்துள்ளேன்.

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தை மறந்து படிப்பிற்கான வேலை தேடி அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று அடிமையாக வேலை செய்கின்றனர். இளைய தலைமுறையினர் விவசாயம் செய்ய கற்றுக்கொண்டு விவசாயம் செய்தால் முன்னேறலாம். நாடும் முன்னேற்ற பாதையில் செல்லும். விவசாய பொருட்களுக்கு உரிய விலையை ஒன்றிய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும். அழிந்து வரும் நாட்டு இனமாடுகளை காக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: