கிணத்துக்கடவுக்கு வராமல் பாதியில் திரும்பும் தனியார் டவுன் பஸ்கள்: பயணிகள் பரிதவிப்பு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவுக்கு வராமல் பாதியில் திரும்பும் தனியார் டவுன் பஸ்களால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

கிணத்துக்கடவுக்கு கோவை காந்திபுரத்தில் இருந்து ஒரு தனியார் டவுன் பேருந்தும் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஒரு தனியார் டவுன் பேருந்தும் தினம்தோறும் வந்து செல்கிறது.

சுமார் 50 ஆண்டுக்கு மேலாக இயங்கி வரும் இந்த தனியார் டவுன் பஸ் சேவையை கிணத்துக்கடவு பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கட்டிட வேலைக்கு செல்பவர்களும், பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களும் பேருந்தை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வரும் இந்த தனியார் பேருந்து சமீபகாலமாக காலை மற்றும் மாலை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் கிணத்துக்கடவுக்கு வருவதில்லை. கோவையில் இருந்து கிணத்துக்கடவுக்கு வரும் இந்த பேருந்துகள் ஒத்தக்கால் மண்டபத்தோடு திரும்பி சென்று விடுகிறது இதனால் பேருந்துக்காக நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றதோடு திரும்பி செல்கிறார்கள். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுனர்களிடம் கேட்டபோது, ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் புட்டுவிக்கி வழியாக சுற்றி சென்று வருகிறோம் அதனால் எங்களுக்கு அதிக நேரம் ஏற்படுகிறது.

அதை சரி செய்யவே ஒத்தக்கால் மண்டபத்துடன் திரும்பி செல்கிறோம்’’ என்றனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, பொதுமக்களின் வசதிக்காக விடப்பட்ட தனியார் பேருந்துகள் கொஞ்சம் கூட மக்களை பற்றி கவலைப்படாமல் நேரத்தை காரணம் காட்டி பாதியில் திருப்பி செல்வது ஏற்புடையதல்ல. இதனால் கூலி தொழிலாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பயணிகளை ஏமாற்றும் வகையில் பாதி வழியில் திரும்பி செல்லும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் தெரிவித்தனர்.

Related Stories: