கிராமப்புறங்களில் ரோட்டோரம் செயல்படும் அங்கன்வாடி மையங்கள்: சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவில், ரோட்டோரம் உள்ள அங்கன்வாடி மையங்கள் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் செயல்படுகிறது. துவக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் என சுமார் 350க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகிறது.

இதில் கிராமபுறங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் அருகில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. அதில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.

ஆனால், பல ஊராட்சி கிராமபுறங்களில் ரோட்டோரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தற்போது ஆங்காங்கே விரிவாக்கம் செய்யப்பட்டதில், சில அங்கன்வாடி மையம் ரோட்டை தொட்டவாறு உள்ளன. அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகள் சிலநேரத்தில், வெளியே நடமாடுவதால் விபரீத செயல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஊராட்சி கிராமங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களை பராமரிப்பு பணிக்காக, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் பல ஊராட்சிகளில் செயல்படும், அங்கன்வாடி மையங்களை பராமரிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. அதிலும் ரோட்டோரம் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் இன்னும் சுற்றுச்சுவர் ஏற்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் உள்ள அங்கன்வாடி மையத்தில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு தயக்கம் காட்டுவதால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து கிராமப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் செயல்பட்டாலும், அங்கு அங்கன்வாடி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் அங்கன்வாடி மையத்தை சீரமைப்பதற்கான கட்டமைப்பு பணியே மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. அதிலும் பல அங்கன்வாடி மைங்ககளில், சுற்றுச்சுவர் இல்லாமலும், சில பள்ளிகளில் இடிந்த சுற்றுச்சுவரை சீரமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை இல்லாமல் இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. எனவே, அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி கிராமபுறங்களில் ரோட்டோரம் உள்ள அங்கன்வாடி மையங்களில் சுற்றுச்சுவர் ஏற்படுத்த வேண்டும். போதிய அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: