ஆழியார் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் யானை, சிறுத்தை, புலி, மான்கள், வரையாடுகள் போன்ற அரிய வகை விலங்குகள் உள்ளன. மழைப்பொழிவு குறையும் காலங்களிலும், கோடை காலங்களிலும், வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுக்காக ஆழியார் வனப்பகுதி மற்றும் ஆழியார் அணை பகுதிக்கு இடம்பெயர்வது  வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானை உள்ளிட்ட விலங்குகள் ஆழியாறு அணை மற்றும் மலைப்பகுதிகளை சுற்றி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இதிலும் குறிப்பாக ஆழியார் பகுதியில் ஒற்றை காட்டு யானை கடந்த சில தினங்களாகவே, விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து வனத்துறை சார்பில் இரண்டு தனி குழுக்கள் அமைக்கப்பட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஆழியார் வால்பாறை சாலையில் உள்ள கவியருவி மற்றும் சின்னார்பதி உள்ளிட பகுதிகளில் அந்த ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இதனால், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் வாகனங்களில் நிறுத்த வேண்டாம் என்றும், மாலை நேரங்களில் கவனமாக வனப்பாதைகளில் செல்ல வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: