கற்றல் திறனை பாதித்த கொரோனா

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுநல மருத்துவர்  புகழேந்தி

கொரோனாவால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளில் முக்கியமானது பள்ளிகளை மூடியதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல்-திறன் குறைப்பாடு. UNICEF, UNESCO,WORLD BANK, ஆய்வுகளில் உலக நாடுகளில் தொற்று தொடங்கிய 21 மாதங்களில் சராசரியாக 224 நாட்கள் பள்ளிகள் மூடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், இந்தியாவில் தற்போது வரை அது மிக அதிகமாக, 570-600 நாட்கள் வரை மூடப்பட்டு மாணவர்களின் கற்றல் திறனை வெகுவாக பாதித்துள்ளது.

மூன்றாம் அலை முடிந்த பின் தற்போது பள்ளிகள் திறந்த நிலையில் வட மாநிலங்களில் சில பள்ளிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், தொற்று பரவலுக்கு பள்ளிகள் காரணம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் மூலம், வெளி உலகிற்கு தங்களை மாணவர்கள் காட்டிக் கொண்டதாலும் தொற்று ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே ஆய்வுகள் சொல்கின்றன.  மற்ற இடத்தில் எவ்வாறு நோய்தொற்று ஏற்படுகிறதோ, அதே போல் பள்ளிகளிலும் நோய்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதென்பதை புரிந்து கொண்டு பள்ளிகளை மூட வேண்டும் அல்லது இணைய வழிக் கற்றலை மீண்டும் கொண்டு வர வேண்டும் என முடிவெடுப்பதற்கு எந்த தெளிவான அறிவியல் ஆதாரங்களும் இல்லை.

பள்ளிகளில் பாதிப்பு ஏற்றஇறக்கங்களுடன் இருந்தாலும், அதனால் பெரும் பாதிப்பு வருவதில்லை. பள்ளிக் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், நோய்த் தீவிரம், இறப்பு மிக மிகக் குறைவென்பதால்(கொரோனா வைரஸ் உட்புகும் ACE-2 receptor- குழந்தைகளுக்குக் குறைவு)பள்ளிகளை மூடுவது தேவையற்ற ஒன்று.இந்தியாவில் செய்யப்பட்ட ரத்த  ஆய்வில் 70-90% பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு புரதம் ரத்தத்தில் உள்ளதால் அவர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதை கருத்தில் கொண்டு பள்ளிகளை மூடுவது அவசியமில்லை. தற்போது உருமாற்றம் பெற்ற கொரோனா வகை வைரஸ்கள் தோன்றினாலும்,நலமான குழந்தைகளுக்கு பாதிப்பின் தீவிரத்தில் பெரும் மாற்றம் இருக்காது என்றே கணிக்கப்படுகிறது.

பள்ளிகள் திறந்ததாலேயே அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்கு திரும்பி விட்டனர் என்ற நிலை இல்லாததால், அனைத்து மாணவர்களையும், பள்ளிகளுக்கு திரும்புவதை பள்ளிக் கல்வித்துறை உறுதிபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். (குறிப்பாக ஏழை/எளிய பள்ளிக் குழந்தைகள்). கொரோனா காலத்தில் பள்ளிகளை மூடியதால் ஏற்பட்ட கற்றல் திறனை மீட்டெடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கற்றல் நேரத்தை அதிகமாக்குதல் குறித்து சிந்திக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் திறனை சரியாக அறிந்து அதை மேம்படுத்த ஆசிரியர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கைகள் தேவை.(டெல்லியில்  ஆசிரியர்களை ஊக்கப்படுத்தியதால் கற்றல் திறன் மேம்பட்டது.)

இந்தியாவில் தற்போது 3%of GDP மட்டுமே கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டு வருவது போதுமானதன்று. இதை மேம்படுத்தி புதிய உத்திகளைக் கையாண்டு கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மனச்சிக்கல்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் அதனைத் தீர்க்க மனநல ஆலோசனை வழங்குவது குறித்து அரசுகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அதை கண்டுபிடிக்க மனநல மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.  

பள்ளிகள் மூலம் கிடைத்து வந்த சத்துணவு 12 கோடி குழந்தைகளுக்கு நிறுத்தப்பட்டதால் அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போனதால் மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளதால், பள்ளிகளை மூடுவது சரியான முடிவு அல்ல. பள்ளிகளில் கைச்சுத்தம், கழிப்பறை வசதிகளை கொரோனா நோய் தடுப்பு மூலம் மேம்படுத்துவதால் நீர் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்த முடியும். அதனால் மாணவர்களின் பொதுச் சுகாதாரமும் மேம்படும்.

 

டெங்கு, மலேரியா, டைபாய்டு  ஏற்படுத்தும் பாதிப்பைக் காட்டிலும் கொரோனா பாதிப்பு குறைவே. ஆக நோய் பாதிப்பைக் காட்டிலும் கற்றல் திறன் குறைப்பாடு ஏற்படுவது மிகப் பெரும் பாதிப்பு என்பதை நாம் உணர வேண்டும். ஆய்வுகள் ஒரு மாதம் பள்ளிகள் மூடிக் கிடந்தால் அது மாணவர்களின் கற்றல் திறனை பழைய அளவிற்கு கொண்டுவர 2 மாதங்கள் ஆகின்றது  என்பதை அறிந்தால் இந்தியாவில் மாணவர்களின் ஏற்கனவே இருந்த கற்றல் திறனை மீட்டெடுக்க 3 வருட காலம் ஆகும் என்பது தெளிவு. ஆக, உரிய கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, பள்ளிகளை மூடாமல், மாணவர்களின் கற்றல் திறனை பாதுகாத்து, மேம்படுத்துவது சமூகத்தில் உள்ள அனைவரது கடமையாகும். 

Related Stories: