வரலாற்று வெற்றியை பெறுவார் இளங்கோவன்: திருநாவுக்கரசர் எம்பி உறுதி

பாளை. தூய சவேரியார் கல்லூரி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த முன்னாள் மாணவர் மன்ற குடும்ப விழாவில் முன்னாள் மாணவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் எம்பி பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறுவார். வரும் 3ம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்கிறோம். படுதோல்வி அடைவோம் என்ற பயத்தில் எதிர் அணியினர் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

அதிமுக மூன்று, நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. யார் வேட்பாளர் என்று அறிவிக்க முடியாமல்  சின்னாப்பின்னமாகி குழப்பத்தில் கிடக்கிறது. கூட்டணியில் உள்ள பாஜ அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்குமா என்பதே இதுவரை தெரியவில்லை. பாஜ தனது கைப்பாவையாக அதிமுகவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் பிரிந்தவர்கள் வெகுதொலைவில் சென்று விட்டார்கள். இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைவது மாதிரி தெரியவில்லை. இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரை மேலிடத்தில் இருப்பவர் பார்த்துக் கொள்வார் என்கின்றனர். யார் நின்றாலும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார். எங்களது வெற்றி உறுதியானது என்றார்.

Related Stories: