பாஸ்டேக் முறையை மாற்றி தானியங்கி நம்பர் பிளேட் ரீடிங் கேமரா மூலம் கட்டணம் வசூல்

* சுங்கச் சாவடிகளை நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை

* தேசிய நெடுஞ்சாலையில் டயர் ஏறி இறங்கினால் பணம் கட்ட வேண்டும்

* விவசாயிகள், சிறு வியாபாரிகள் யாரும் தப்ப முடியாது

* சிறப்புச்செய்தி

சுங்கச்சாவடிகளில் வழக்கமாக உள்ள பாஸ்டேக் முறையை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்களின் நம்பர் பிளேட்டை தானியங்கி முறையில் ஸ்கேன் செய்து, அதன் உரிமையாளர்களிடம் பணம் வசூலிக்கும் நடைமுறையை அறிமுகமாக உள்ளது. அதாவது, தேசிய நெடுஞ்சாலையில் 50 மீட்டர் பயணிக்கும் கிராமத்தை, நகரத்தை சேர்ந்த ஒரு வாகன ஒட்டி இதுவரை கட்டணம் கட்டவில்லை. இந்த முறை அமலுக்கு வந்தால், சாலையை கிராஸ் செய்தாலே பணம் கட்டவேண்டி வரும். இது பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துவிடும் என்று வாகன உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நாட்டில், 2020ம் ஆண்டு முதல் பாஸ்ட்டேக் முறை அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே, வழக்கத்தில் உள்ள இந்த முறை நீக்கப்பட்டு, சுங்கச்சாவடி கட்டணங்களை ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடிங் கேமரா மூலம் வசூலிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் சுங்கச்சாவடி என்ற நடைமுறையே இந்தியாவில் இருக்காது. இது அமலுக்கு வந்தால், சுங்கச்சாவடிகளில் கட்டணம் நீண்ட நேரம் வரிசை கட்டி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

* கட்டணம் வசூலிப்பில் முறைகேடு

பாஸ்ட் டேக் முறைக்கு பதிலாக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கட்டணம் கணக்கிடப்பட்டு வாகன உரிமையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். பாஸ்ட் டேக் என்ற முறையே இன்னும் பெரும்பாலான மக்களிடம் சென்று சேராத நிலையில், ஒன்றிய அரசின் புதிய முறை குழப்பத்தை தரும். அதற்குள், புதிதாக ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் சிஸ்டம் கொண்டு வருவது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். வாகன உரிமையாளரின் கணக்கில் இருந்து, அவரின் சம்மதம் இல்லாமல் எப்படி பணத்தை எடுக்க முடியும். இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்கிறார்கள் பொதுமக்கள். வேறு ஒருவரின் நம்பர்ளை தன் பிளேட்டில் எழுதி, சுங்கச்சாவடியை கடந்தால், அந்த போலி நம்பரின் உண்மையான உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்துதான் பணம் எடுக்கப்படும். இதன் மூலம் கட்டண மோசடியால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காரணம் பெரும்பாலானவர்கள் வாகனம் வாங்கினாலும், உடனே வாகன உரிமையாளர் பெயரை மாற்றுவதில்லை.

* கட்டணம் வசூலிக்கும் கேமராக்கள்

ஏ.என்.பி.ஆர். நடைமுறைக்கு வந்தால் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். அதற்கு பதிலாக ஒரு தேசிய நெடுஞ்சாலைக்குள் உள்ளே நுழையும் மற்றும் வெளியே செல்லும் பகுதிகளில் நம்பர் பிளேட்டை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டை எடுத்து எந்த இடத்தில் இந்த வாகனம் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்துள்ளது என்று சிஸ்டத்திற்கு தகவல் தெரிவிக்கும். பின்னர் எங்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறுகிறது என்பதையும் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் கட்டணத்தை ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை வசூலிக்கும்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் இந்தியா முழுவதும் ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடிங் முறையை  பரிசோதனை செய்துள்ளன. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் இந்த திட்டம் செயல்படுத்தும் விதம், அதில் உள்ள சாத்திய கூறுகள் உள்ளிட்ட அம்சங்களை கண்காணித்து ஒன்றிய அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். இதை நடைமுறைப்படுத்துவதற்காக டெல்லி மற்றும் சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு சுங்கச்சாவடியில் சோதனை நடத்தப்பட்டது. இதன் அறிக்கை, பிப்ரவரி 1 முதல் 7ம் தேதிக்குள் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர்  ஜூட் மேத்யூ கூறுகையில், ‘‘பாஸ்ட் டேக் முறை குறித்து மக்கள் நிரந்தர தெளிவு இல்லாமல் உள்ளனர். சில சமயங்களில் இரண்டு முறை பணம் எடுக்கப்படுவது குறித்த புகார் தெரிவிக்க வழி இல்லை. வாகன ஓட்டிகள் வருடாந்திர அடிப்படையில் நெடுஞ்சாலைக்கு பணம் செலுத்த தயாராக உள்ளோம். மாநில நெடுஞ்சாலைகள் நகரப்புற பகுதிகளில் மட்டுமே உள்ளது. நகர்ப்புறத்தை தாண்டியதும் தேசிய நெடுஞ்சாலைகள் என மாற்றப்படுகிறது. பாதுகாப்பற்ற நிலையிலேயே நெடுஞ்சாலைகள் உள்ளன. எந்த ஒரு சுங்கச்சாவடிகளிலும் கழிவறை இல்லை. எதற்கும் பயனற்ற நிலையில் எதற்காக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

* கடந்த 2019ம் ஆண்டு தான் வாகனங்களுக்கு வாகன தயாரிப்பு நிறுவனங்களே நம்பர் பிளேட்களை வழங்க தொடங்கியது. அதற்கு முன்னர் வாங்கப்பட்ட வாகனங்களில் நம்பர் பிளேட்கள் ஒவ்வொரு வாகனத்திறகும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். ஆப்டர் மார்க்கெட் நம்பர் பிளேட்களை இந்த கேமராக்கள் எந்த அளவிற்கு கணிக்கும் என்பது தெரியவில்லை.

* 2022 டிசம்பர் மாதம் நாள் ஒன்றுக்கு ரூ.134 கோடி வசூலானதாகவும், அதிகபட்சமாக டிசம்பர் 24ம் தேதி ரூ.144 கோடி வசூலானது.

* பாஸ்டேக் மூலம் வசூல் 46 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரூ.50,000 கோடி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

* இதுவரை சுங்க கட்டணம் செலுத்தாதவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான விதிமுறை இல்லை. ஆனால் கட்டணம் தொடர்பான மசோதா கொண்டு வந்தால் தண்டனை வழங்கப்படும்.

* பலன்கள்

நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் செல்லும் வாகனங்களில் இருந்து சுங்கவரி தானாகவே வசூலிக்கப்படும். அரசாங்கத்தால் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கேமராக்கள் மூலம் கட்டணம் வசூலிக்க நேரம் எடுக்காது. வாகனம் எவ்வளவு கி.மீ. பயணம் செய்துள்ளதோ அதற்கான தொகை மட்டும் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

* மக்களுக்கு பாதிப்பு அதிகம்

கிராமம் மற்றும் நகரத்தில் வசிக்கும் ஒருவர் தன் வீடு அல்லது அலுவலகத்துக்கு வாகனத்தில் செல்லும்போது தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும். பின்னர், நகரத்தில் உள்ள பகுதிக்கு வருகிறார் என்றால், அந்த குறிப்பிட்ட தூரத்தை கேமரா மூலம் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் அல்லது காவேரிபாக்கம் இடையில் சுங்கச்சாவடி இல்லை. இதனால், இந்த பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் லாரி, கார், டிரக் போன்ற வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. ஒன்று வாலாஜா டோல்கேட்டில் வாங்க வேண்டும் அல்லது ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதற்கு இடைப்பட்டுள்ள நகர, வர்த்தக, தொழிலக பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களில் கட்டணம் வசூலிக்கப்படாது. புதிய முறை அமலானால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் பொருட்கள் விலை உயரும், வண்டி வாடகை உயரும் ஆபத்து உள்ளது.

Related Stories: