நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை:  நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.351.12 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு 303.37 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:

 பச்சைமலை, கொல்லிமலை, கபிலமலை, திருச்செங்கோடு மலை, சேர்வராயன் மலை என இயற்கை எழில் சூழ்ந்த மலைகளின் மாவட்டம்தான் இந்த நாமக்கல் மாவட்டம். இது, மலைகளின் மாவட்டம் மட்டுமல்ல, மலையளவு உழைக்கும் மக்கள் நிறைந்த மாவட்டம். தங்கள் உழைப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கும், இந்தியா ஒன்றியத்தின் பொருளாதத்திற்கும் வலுசேர்க்கும் மக்கள் நிறைந்த மாவட்டம்தான் நாமக்கல் மாவட்டம். கோழிப் பண்ணைகளை அமைத்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பவர்கள்தான் இந்த நாமக்கல் மக்கள். முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது, தமிழ்நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியில் 90 % நாமக்கல் இருந்துதான் உற்பத்தியாகிறது. அதனால் தான் நாமக்கல்-லை முட்டை நகரம் என்கிறோம்.

 

ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரங்கள், தமிழ்நாட்டிலே இந்த நாமக்கல் மாவட்டத்தில் அதிகம். அதேபோல் நாமக்கல் என்றாலே உடனே நினைவுக்கு வருவது லாரிகள் தான். லாரி இல்லாத வீடே இல்லை, அவ்வளவு ஏன் நாமக்கல் லாரிகள் ஓடாத தமிழ்நாட்டின் வீதிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு சுமார் 60 ஆயிரம் லாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே உள்ளன. அதேபோல் நாமக்கல் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது.

நம்முடைய நாமக்கல் கவிஞர் தான். “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்று உரிமை குரலாக ஒலித்தவர்தான் நாமக்கல் கவிஞர்  இராமலிங்கம் அவர்கள். அத்தகைய நாமக்கல் கவிஞர் பெயரிலான பத்து மாடி பிரமாண்ட  கட்டடத்தில்தான் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள் இயங்குகிறது. தமிழ்நாட்டையே இயக்கும்  தலைமைச் செயலக அலுவலக இருக்கும் கட்டடத்துக்கு பெயர் நாமக்கல் கவிஞர் மாளிகை என்பது பலருக்கும் தெரியும்.

அந்த பெயரை வைத்து நாமக்கல் கவிஞருக்கும், நாமக்கல் மக்களுக்கும் பெருமையை தேடித் தந்தவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். 1989-ம் ஆண்டு முத்தமிழறிஞர் ஆட்சியில்தான் நாமக்கல் கவிஞர் மாளிகை என பெயர் வைத்தார்கள். இன்னும் பல பெருமைகளும், உழைக்கும் மக்களும் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு சார்பிலான இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களை எல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்பு, நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், 351 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 315 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம். அதேபோல 23 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்தோம். நான் பேசி முடித்தபிறகு 1 லட்சத்து 3 ஆயிரத்து 321 பயனாளிகளுக்கு 303 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உள்ளோம். இன்று மட்டும் மொத்தம் 678 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் மட்டும் அல்ல, கழக ஆட்சி அமைந்ததிலிருந்து இந்த நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டால் அதற்கே பல மணி நேரங்கள் ஆகும். அவற்றில் சில திட்டங்களை மட்டும் பட்டியிலிட விரும்புகிறேன். நம் முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்திட்டதே, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இனி கிடையாது என்பதற்கான கோப்பில்தான். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 216 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாமக்கல்லில் 3 கோடியே 71 லட்சம் பயணங்களை நம் மகளிர் மேற்கொண்டு இருக்கிறீர்கள். தவிர திருநங்கைள் 16 ஆயிரத்து 190 முறையும், மாற்றுத்திறனாளிகள் 2.52 இலட்சம் பயணங்களையும் இந்த மாவட்டத்தில் மேற்கொண்டு உள்ளனர்.

நாம் ஆட்சி அமைத்தபோது கொரோனா 2-ம் அலை. வழக்கமான நோய்களுக்குக்கூட சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்ல பயந்த சூழல்.  அதை ஈடுகட்டும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார்கள். இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட மருந்து பெட்டகங்கள் பயனாளிகளிடம் சென்று சேர்ந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் 1 இலட்சத்து 86 ஆயிரத்து 743 பேர் பயனடைந்துள்ளனர். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் மகத்தான திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,16,000 பேர் பயனடைகின்றனர்.

இதன்மூலம் அரசுக்கு சுமார் 47 கோடி ரூபாய் செலவாகிறது. தற்போது கூடுதலாக 1 லட்சத்து 4,334 மாணவிகள் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். நாமக்கல்லிலும் ஆயிரக்கணக்கானோர் இத்திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் 88.02 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சித்தம்பூண்டி நேதாஜி மகளிர் சுய உதவிக்குழு, அம்மன் மகளிர் சுயஉதவிக்குழு, சக்தி மகளிர் சுயஉதவிக்குழு இப்படி இங்கு கூடியுள்ள மகளிர் குழுக்களாகிய நீங்களும் கடன் தள்ளுபடி பெற்று புதிய கடன்களை பெற வந்துள்ளீர்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியது, இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48… இப்படி எண்ணற்றத் திட்டங்களை பட்டியலிட்டுக்கொண்டே போக முடியும்.  இராசிபுரம் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பட்டு ஏலம் மையம் அமைக்கப்பட்டு இதுவரை 7 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக இந்த மையத்தின் மூலம் பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் கட்ட 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு கால்நடை மருத்தவக் கல்லூரி வளாகத்தில் தினமும் 1 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க ரூ.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மோகனூர் சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ராசிபுரத்தில் 1300 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இராசிபுரம் அரசு தலைமை மருத்தவமனை மாவட்ட தலைமை மருத்தவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்ப்டடு கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இப்படி நாமக்கல் மாவட்டத்திற்கான பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த சாதனைகள் எல்லாம் கடந்த 18 மாதத்தில் திராவிட மாடல் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு நாமக்கல்லுக்கு கொண்டு வந்த திட்டங்கள்.. வரும் காலங்கள் இன்னும் எண்ணற்ற பல திட்டங்கள் நாமக்கல்லுக்கு கிடைக்க உள்ளன. சகோதரர் ராஜேஸ்குமார் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் உரிமையோடு உங்களுக்கான பல்வேறு திட்டங்களை பெற்றுத்தருவார்.

 உங்களுக்காக உழைக்க அரசாக இந்த அரசு உள்ளது, நம் முதலமைச்சர் சொல்வதைப் போல் ‘இது அனைவருக்குமான அரசு”இந்த திராவிட மாடல் அரசால் நாமக்கல் இன்னும் செழுமையாக்கட்டும் என வாழ்த்தி.. இந்த நிகழ்ச்சியில் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முழு முயற்சி மேற்கொள்வேன்.

நான் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்பதை தாண்டி உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாகவும், உங்கள் சகோதரன் ஆகவும் என்றும் இருப்பேன். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் மதிவேந்தன் அவர்களுக்கும், நிகழ்ச்சி சிறக்க உழைத்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து.. நன்றி கூறி விடைபெறுகிறேன் இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் .கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் உறுப்பினர் கு.பொன்னுசாமி , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா இ.ஆ.ப., சிறப்பு திட்ட செயலாக்கத்தின் அரசு சிறப்பு செயலாளர் எஸ்.நகராஜன் இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன் இ.ஆ.ப.,  மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக முகமை சிவக்குமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: