தமிழ்நாடு வார்த்தையை பயன்படுத்தி முதல்வரின் உருவம் வரைந்த அரசு கல்லூரி மாணவி: பாராட்டுகள் குவிகிறது

கும்பகோணம்: தமிழ்நாடு என்ற வார்த்தையை பயன்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவபடத்தை வரைந்த அரசு ஓவியக்கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆரியப்படையூர் குடியான தெருவில் வசிப்பவர் ரமேஷ் (54). தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கதிரேசன், கேசவமூர்த்தி என்ற இரு மகன்களும், துர்கா (21) என்ற ஒரு மகளும் உள்ளனர். கும்பகோணம் அருகே கொட்டையூரில் அரசு கவின் கலைக்கல்லூரியில் சிற்பக்கலை முதலாம் ஆண்டு படித்து வரும் துர்கா, தனது சிறு வயது முதல் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சட்டமேதை அம்பேத்கர், நடிகர்கள் அஜித், விஜய், தனுஷ், விவேக் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோரின் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் அச்சு அசலாக அவர்களை போலவே வரைந்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு பாபநாசத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்ற மாநில ஓவிய போட்டியில் இந்திய வரைபடத்தை 25 அடி அகலம் மற்றும் நீளத்தில் வரைந்து பரிசு பெற்றுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, நெஞ்சுக்கு நீதி என்ற படத்தின் பெயரை பயன்படுத்தி விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வரைந்து ட்விட்டரில் பதிவிட்டார் மாணவி துர்கா. இதனை ட்விட்டரில் பார்த்த உதயநிதி ஸ்டாலின் நன்றி என பதிலளித்து மாணவி துர்காவை ஊக்கப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உற்சாகத்தில் கடந்த மாதம் 4ம் தேதி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உருவப்படத்தை வரைந்து அன்றே அவரிடம் நேரில் சென்று அந்த ஓவியத்தை பரிசாக அளித்து பாராட்டையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

அரை மணிநேரத்தில் வரைந்த இந்த ஓவியம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ‘‘தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி’’ எனும் திரைப்பாடல் ஒலிக்கிறது. வீடியோவில் தமிழ்நாடு என்ற வார்த்தைகளால் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் கண்களையும், கருத்தையும் கவர்ந்து இழுக்கிறது. ஓவியத்தின் முடிவில் ‘‘தமிழ்நாடு வாழ்க’’ என்ற வார்த்தையையும் மாணவி துர்கா குறிப்பிட்டுள்ளார். இந்த வைரல் வீடியோவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து மாணவி துர்கா கூறுகையில், நமது நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் தான் பொருத்தமானது. இதை யாராலும் மாற்ற முடியாது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மீது ஆர்வம் கொண்டு 350க்கும் மேற்பட்ட தமிழ்நாடு என்ற வார்த்தைகளை பயன்படுத்தி அதிகபட்சமாக 30 நிமிடங்களில் அவரது உருவ படத்தை வரைந்துள்ளேன். முதலமைச்சரின் உருவப்படத்தை அவரது கவனத்திற்கு எடுத்து சென்று, அவரிடம் பரிசாக வழங்கி பாராட்டுக்களை பெற வேண்டும் என்பதே எனது கனவு என்றார்.

Related Stories: