காவல் ரோந்து வாகனங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா? போலீசார் எதிர்பார்ப்பு

நெல்லை: போலீசாரின் ரோந்து வாகனம் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களுக்கு டீசலை அதிகரித்து வழங்க வேண்டும் என காவலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டில் குற்றவாளிகளை கைது செய்வது, இயற்கை சீற்றங்கள், பண்டிகைகள், நோய் தொற்று இப்படி எந்த காலகட்டத்திலும் ஆண்டும் முழுவதும் விடுமுறை இன்றி இயங்கக்கூடிய துறை காவல்துறை. அப்படிப்பட்ட காவல்துறைக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 2 ரோந்து வாகனங்கள், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தனி வாகனம், போலீஸ் உதவி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தனி வாகனங்கள் என காவல்துறை சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கு எரிபொருள் பயன்பாடு என்பது 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயித்த அளவிலேயே உள்ளது. இதில் குறிப்பாக ஒரு வாகனத்திற்கு 140 லிட்டர் டீசல் அரசு வழங்குகிறது.

சில வாகனங்களுக்கு மட்டும் கூடுதலாக 40 லிட்டர் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் அதிகபட்சம் ஒரு வாகனத்திற்கு 180 லிட்டருக்கு மேல் பயன்படுத்த முடியாது என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. காவல்துறையில் உள்ள பெரும்பாலான வாகனங்கள், ஜீப் போன்ற வாகனங்களாக உள்ளன. இவை ஒரு லிட்டர் டீசலுக்கு 8 முதல் 10 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. காவல்துறை சார்பில் அளிக்கப்படும் இந்த டீசல் அளவு அவர்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்ந்து விடுகிறது. அதற்கு மேல் தங்களது கை காசை போட்டு டீசல் போட வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும். குறிப்பாக, காவல் நிலையம் அருகாமையில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள் அவர்களது வீட்டிற்கு எளிதில் சென்று வருவார்கள்.

இதற்கு அதிகமாக டீசல் செலவு ஆகாது. ஆனால், வீடு சற்று தொலைவில் உள்ளவர்களுக்கு அதிகப்படியான டீசல் தேவைப்படும். இதனால், ஒரு மாதத்திற்கு கூடுதலாக அவர்கள் 100 லிட்டர் டீசலுக்கு மேல் போட வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், இது போன்று ரோந்து வாகனங்களை எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் 3 ஷிப்ட் என்ற அடிப்படையில் ரோந்து வாகனங்கள் சுற்றிக் கொண்டே உள்ளன. இதனால், ஒரு நாளைக்கு 10 லிட்டர் டீசல் தேவைப்பட்டால் கூட ஒரு மாதத்திற்கு 300 லிட்டர் வரை தேவைப்படுகிறது. ஆனால், காவல்துறை சார்பில் 140 முதல் 150 லிட்டர் வரை வழங்கப்படுவதால் ரோந்து வாகனங்களுக்கு டீசல் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், இதனால் அதை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் ரோந்து வாகனங்களை மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு போலீசார் சரிவர ரோந்து செல்வதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதனால், அவ்வப்போது குற்றச் செயல்களும் அதிகரிக்கின்றன. இதை எல்லாம் கருத்தில் கொண்டு பழைய நடைமுறையில் உள்ள டீசல் அளவை மாற்றி, தற்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ப வாகனங்களுக்கு டீசல் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என காவல்துறை வட்டாரத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளிடம் கேட்ட போது பழைய நடைமுறையை விடுத்து புதிய காலகட்டத்திற்கு ஏற்ப டீசல் வழங்கும் அளவை அதிகரித்து தருமாறு ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: