முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட ரூ.15 லட்சம் ரயில் பயண சீட்டுகள் பறிமுதல்: கடந்த ஆண்டில் 90 பேர் கைது

நெல்லை: மதுரை கோட்டத்தில் ரயில் பயண சீட்டுக்களை முறைகேடாக விற்ற 90 பேர் கடந்தாண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த ரூ.15.44 லட்சம் பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே சொத்துக்களை பாதுகாக்கவும், ரயில் சேவை பணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கவும் ரயில்வே பாதுகாப்பு படை சட்டம் 1957ன் படி ஒன்றிய அரசு ரயில்வே பாதுகாப்பு படையை உருவாக்கியது. ரயில்களில் குற்றங்களை தடுக்கவும், பயணிகளை பாதுகாக்கவும், பயணிகள் பாதுகாப்புடன் பயணம் செய்யவும், மகளிர் மற்றும் குழந்தை கடத்தலை தடுக்கவும் ரயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கடந்தாண்டு மதுரை கோட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ரயில் பயண சீட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து ரூ.15.44 லட்சம் மதிப்புள்ள பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலையை ரயிலில் கொண்டு சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.2.56 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல போலி மது பாட்டில்கள் கடத்திய 6பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரத்து 477 மதிப்புள்ள மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. ரயிலில் 122.85 கிலோ கஞ்சா கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.9.79 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் நிலையத்தில் சுற்றிய 195 சிறுவர்கள், 35 சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ரயில்வே சொத்துகளை அபகரித்த 59 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.4.82 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. ரயில்வே சட்ட விதிகளை மீறியவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.15.94 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை அசுத்தப்படுத்திய 4 ஆயிரத்து 684 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.9.66 லட்சம் வசூ லிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிகள் தவறவிட்ட ரூ.42.45 லட்சம் மதிப்புள்ள உடைமைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்த 120 பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

Related Stories: