உச்சநீதிமன்றத்தில் 30ம் தேதி இரட்டை இலை வழக்கு விசாரணை எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் முடிவு

சென்னை: இரட்டை இலை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலையில் தீவிர ஆலோசனை நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதனால் எதிர்க்கட்சிகளிடம் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால், அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் எழுந்துள்ளது. எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தங்களுக்குத்தான் அதிமுக சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகின்றன. இந்தநிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எடப்பாடி அணி போட்டியிட முடிவு செய்தது. இதற்காக பாஜகவிடம் ஆதரவு கேட்டது. அவர்களும் கொடுப்பதாக உறுதியளித்திருந்தநிலையில், திடீர் திருப்பமாக ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவு கேட்டு நின்றார். அவரும் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார்.

இல்லாவிட்டால் பாஜகவே போட்டியிட வேண்டும். நாங்கள் ஆதரிக்கத் தயார் என்று கூறிவிட்டார். பாஜக போட்டியிட்டால் ஆதரிக்க தயார் என்று புதிய நீதிக்கட்சி, தமிழக முன்னேற்றக்கழகம் ஆகியவை அறிவித்தன. இதனால் எதிர்க்கட்சிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பாஜகவும் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதை அறிவிக்க முடியாமல் திணறியது.

ஓரளவு செல்வாக்கு உள்ள எடப்பாடி அணியை ஆதரிப்பதா? எப்போதும் தனக்கு ஆதரவாக இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பதா என்ற குழப்பம் நீடித்து வருவதால் யாருக்கு ஆதரவு என்பதை சொல்ல முடியாமல் அமித்ஷா தவித்து வருகிறார். இந்தநிலையில், இருவரும் போட்டியிட முடிவு செய்துள்ளதால், இரட்டை இலை முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதேநேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும். அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனால், தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீரிக்க வேண்டும். இதனால் உச்சநீதின்றத்தின் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும். அல்லது இடைக்கால தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. வருகிற 30ம் தேதி அதாவது திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளது. அதில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது அல்லது சாதகமான தீர்ப்பு வராவிட்டால், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவது என்று எடப்பாடி முடிவு செய்துள்ளார். இதற்காக 30ம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளார். உச்சநீதின்றம் தீர்ப்பு வந்த பிறகே தனது வேட்பாளரை அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் பாஜகவின் முடிவுக்காக காத்திருக்கிறார். அவரும் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து சிக்கலும், இழுபறியும் நீடிக்கிறது.

இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு தலைவர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், சுப்புரத்தினம் ஆகியோருடன் இன்று காலையில் சென்னையில் உள்ள வீட்டில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் உச்சநீதின்ற விவகாரம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் ஈரோட்டில் உள்ள ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார். இன்றும் 3வது நாளாக காலையில் ஆலோசனை நடத்தினார். இன்று பிற்பகலில் அவர் சேலம் திரும்ப திட்டமிட்டுள்ளார். இருவருமே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதால், அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

சின்னமும் இல்லை... வேட்பாளரும் தெரியலை...

அதிமுகவின் இரு அணியினருக்கும் தற்போதைய நிலையில் சின்னம் கிடைக்காத நிலை உள்ளது. இரு அணியிலும் வேட்பாளர் யாரென்றும் தெரியவில்லை. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோட்டில் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, இன்று முதல் வீடு வீடாக சென்று நிர்வாகிகள் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோடு, ஒவ்வொரு நிர்வாகிக்கும் வாக்குச்சாவடி பட்டியல், வாக்காளர் பட்டியல்களை வழங்கி உள்ளார். தேர்தல் பணி பொறுப்பாளர்கள் பணிகளை சரியாக மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க தனக்கு நெருக்கமான ஆட்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

இதனிடையே வாக்காளர்களை நேரில் சென்று சந்திக்கும் போது எந்த சின்னத்திற்கு வாக்கு கேட்பது, வேட்பாளர் யார் என எந்த விவரமும் இல்லாமல் எதைச் சொல்லி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பது என்பது தெரியாமல் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.

Related Stories: