பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்னை இலை கருகல் நோயால் விவசாயிகள் வேதனை: அதிகாரிகள் அறிவுரை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள பல கிராமங்களில் தென்னையில் இலை கருகல் நோய் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் ஆனைமலை, கோட்டூர், சமத்தூர், ஒடையகுளம், ஆழியார், சேத்துமடை, கோபாலபுரம், கோமங்கலம், அம்பராம்பாளையம், வடக்கிபாளையம், நெகமம், சூலக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை இருக்கும்போது, அதற்கேற்ப தென்னை சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாள்கின்றனர். இதனால், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தென்னைகளில், தேங்காய் மற்றும் இளநீரின் காய்ப்புத்திறன் என்பது, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துகொண்டிருக்கிறது. அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழையும் அதன்பின் வடகிழக்கு பருவமழையும் பெய்ததால், தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அதிகமாகியுள்ளது.

இருப்பினும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே, பல கிராமங்களில் உள்ள தென்னைகளில் ஏற்பட்ட வாடல் நோயால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதில் சில கிராமத்தில், சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, வாடல் நோய் பரவலை தடுக்க, வாடல்நோய் பாதிக்கப்பட்ட  தென்னையை வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட அவலம் எற்பட்டது. இதையடுத்து தென்னை வாடல் நோய் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் வேளாண் அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த ஆண்டில் பருவமழை அடுத்தடுத்து பெய்தாலும், சுற்றுவட்டார கிராமங்களின் பல பகுதியில் உள்ள தென்னைகளில், தற்போது மீண்டும் வாடல் நோய் ஒரு பக்கம் இருந்தாலும், சில கிராம பகுதி தென்னைகளில்  இலை கருகல் நோய் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதில் ஆர்.பொன்னாபுரம், கஞ்சம்பட்டி, வடக்கிபாளையம், காளியாபுரம், சூலக்கல், குள்ளிசெட்டிபாளையம், நல்லூத்துக்குளி, ஓரக்காலியூர், குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், வெள்ளை ஈ தாக்கிய தென்னை மரங்களின் ஓலைகள் பட்டுபோனதுபோல் ஆகியுள்ளது. ஒருமரத்தில் இருந்து மற்ற மரங்களுக்கு, பூஞ்சான் பரவி வேகமாக பரவும் என்பதால், வெள்ளை ஈ தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கான முயற்சியில் வேளாண் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறகையில், ‘பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமத்தில் தென்னை விவசாயமே அதிகளவு இருந்தாலும், சில கிராமங்களில் உள்ள விளை நிலங்களில், குறிப்பிட்ட இடைவெளியில்லாமல் அடுத்தடுத்து தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனாலே, ஒரு தென்னையில் ஏற்படும் வாடல் நோய் மற்றும் இலை கருகல் நோய், அடுத்த மரத்துக்கு விரைவில் பரவி விடுகிறது. தென்னையை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், அதனை குறிப்பிட்ட அடி தூரத்துக்கு நடவு மேற்கொள்வதுடன், தென்னைக்கு ஏற்ப இயற்கை உரம் அளிக்க வேண்டும். முறையான பராமரிப்பு இருந்தால், தென்னையில் மகசூல் அதிகரிப்பதுடன், அதிக லாபத்தை அடையலாம். இருப்பினும், தென்னையில் வாடல் நோய் மற்றும் இலை கருகல் நோயை கட்டுப்படுத்துவதற்காக, அவ்வப்போது ஆய்வு பணியும், விவசாயிகளுக்கு உரிய அறிவுரையும் அளிக்கப்படுகிறது’ என்றனர்.

Related Stories: