2021 மோட்டார் வாகன சட்டம் ஸ்கிராப்பிங் திட்டத்தின்படி 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு ஆயுட்காலம் மார்ச் இறுதி வரை: வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் 1,000 வாகனங்களுக்கு சிக்கல்

வேலூர்: 2021 ேமாட்டார் வாகனச்சட்டம் ஸ்கிராப்பிங் திட்டத்தின்படி 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு ஆயுட்காலம் வரும் மார்ச் இறுதியுடன் நிறைவுபெறுகிறது. அரசு வாகனங்கள் மட்டும் அழிக்க ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில் வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் சுமார் 1,000 வாகனங்களுக்கு ஆயுட்காலம் முடிகிறது. நாடுமுழுவதும் சாலை விபத்துக்களால் மனிதர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மனிதன் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களைவிட, சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துக்களினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்துக்கள் பெரும்பாலும், ஆயுட்காலத்தை கடந்தும் இயக்கப்படும் வாகனங்களால் தான் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.  அதேசமயம் பெட்ரோல், டீசல் வாகனங்களினால் ஏற்படும் மாசுக்கட்டுப்படுத்த, அரசு ேபட்டரி வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இதனால் அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் பேட்டரி வாகனங்களாக வாங்க தொடங்கியுள்ளனர். இதில், மாசுகட்டுப்படுத்தவும், ஆயுட்காலம் முடிந்த பின்னரும் இயக்கப்பட்டு வரும் வாகனங்களை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்களுக்கான முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2021 மோட்டார் வாகனச் சட்டத்தின் ஸ்கிராப்பிங் பாலிசியின்படி, 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து அகற்றி, ஸ்கிராப்பிங் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, 15 ஆண்டுகள் நிறைவடைந்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து வாகனங்களின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதம் இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் உட்பட ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குச் சொந்தமான  ஜீப்கள், குப்பை அகற்றும் லாரிகள், மினிவேன்கள், டிராக்டர்கள், குடிநீர் லாரிகள், கழிவுநீர் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஸ்கிராப்பிங் திட்டத்தின் பட்டியலில் அடக்கும்.

இதில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பிடிஓ அலுவலகங்கள், காவல்துறை வாகனங்கள், அரசு போக்குவரத்துகழக வாகனங்கள், குப்ைப வண்டிகள் என்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த ஸ்கிராப்பிங் திட்டத்தில் சிக்குகிறது. இதில் வேலூர் மாநகராட்சியில் குப்பை வாகனங்கள், மாவட்டத்தில் ஒரு சில பிடிஓக்களின் வாகனங்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட அலுவலர் வாகனம் உள்ளிட்டவை இதில் சிக்குகிறது.  அதேபோல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பழைய வாகனங்கள் சிக்குகிறது. இந்த வாகனங்களை அழிப்பதன் மூலம், சுற்றுச்சூழல் மாசுகட்டுப்படுவதுடன், வாகன விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதோடு, பழைய வாகனங்களுக்கு முற்றுப்புள்ளி வருவதால், பழைய வாகனங்களை இயக்கும், டிரைவர்களும், அதனை பயன்படுத்தும் அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: