அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை

சென்னை: பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில் ஆலோசனை நடத்துகிறார்.ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலைச்சின்னம் பெற பழனிசாமி, பன்னீர் தரப்பினர் போராடி வருகின்றனர். வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார் . இரட்டை இல்லை சின்னம் வேட்பாளர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் விவாதித்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு என முன்னதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், நாங்களே உண்மையான அ.தி.மு.க. என்று தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில் அந்த பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் நீடிக்கிறார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று காலை முதல் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் காலமானார். இதனால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது.

Related Stories: