தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

மதுரை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதன் அவசியம் குறித்து விளக்கும் மாநாடு மதுரையில் நடைபெற்றது. திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில்  உரையாற்றிய திமுக எம்.பி., டி.ஆர்.பாலு சாது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சியை பெற்றிருக்கும் என்றும் ஆனால், குழந்தையை மாற்றுத்திறனாளியாக்கியது போல இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டார். எதையும் பகுத்தறிவோடும், அறிவியல் சிந்தையோடும் அணுக வேண்டும் என்ற கோட்பாட்டை பாரதிய ஜனதாவினர் குழி தோண்டி புதைக்கின்றனர் என்றும் டி.ஆர்.பாலு சாடினார். ராமர் பாலம் என்று ஒன்று இல்லை என்றும் மனிதனால் கட்டப்பட்ட கட்டுமானமே அங்கு இல்லை என்று வரலாற்று அறிஞர்களே கூறிவிட்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.   

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். சேது சமுத்திர திட்ட கால்வாய்யை இனிமேல் நாங்கள் தமிழன் கால்வாய், திராவிட கால்வாய் என அழைப்போம் என்றார் அவர். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 3-ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் தொடங்கப்படும் என்றும் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் அறிவியல் சார்ந்த பேசுபவர்களுக்கும், புராணம் சார்ந்து பேசுபவர்களுக்கும் இடையே கருத்தியல் போர் நடைபெறுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார். மதுரை கூட்டத்தில் பேசிய அவர் சேது சமுத்திர வழக்கில் புராதனம் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக அவர் கூறினார். ராமர் பாலம் இல்லை என்று சொன்னால் அதை உறுதிப்படுத்த ஆதாரத்தை காட்டாமல் அதற்கு மாறாக ராமரை கொச்சைப்படுத்துவதாக திசை திருப்பும் வேலையை பாரதிய ஜனதாவின் செய்வதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.         

Related Stories: