2வது மனைவி வீட்டில் டிக்டாக் புகழ் நடன கலைஞர் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை: பிறந்த நாளில் உயிரிழந்த சோகம், முதல் மனைவி போலீசில் புகார்

பெரம்பூர்: டிக்டாக் புகழ் நடன கலைஞர் 2வது மனைவி வீட்டின் 10வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தனது கணவரை கொலை செய்து விட்டதாக முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் குடிசை மாற்று வாரிய பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (42). இவர், சினிமா படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடன கலைஞராக பணியாற்றி வந்தார். மற்றும் யூடியூப் சேனல்கள் மற்றும் டிக்டாக்கில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு பிரபலமானார். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், ஜெனிபர் (25), சமோசர் (21) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூர் மார்க்கெட் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் வசித்து வரும் இன்பவள்ளி என்ற பெண்ணுடன் பல வருடங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு, ரமேஷ் அந்த பெண்மணியை 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரமேஷ் அந்த பெண்ணுடன் புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரமேஷின் முதல் மனைவி சித்ரா தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பிறகு, காவல் நிலையத்திற்கு வந்து ரமேஷ் இனி 2வது மனைவியுடன் வாழ விருப்பமில்லை என எழுதி கொடுத்துவிட்டு, முதல் மனைவியுடன் சென்றுவிட்டார். சில நாட்களிலேயே மீண்டும் 2வது மனைவியுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் ரமேஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு, 2வது மனைவி வீட்டிற்கு சென்று மது அருந்த பணம் கேட்டு உள்ளார். அப்போது, அவர் பணம் இல்லை என்று கூறியதுன், இனிமேல் இங்கு வர வேண்டாம் என சண்டை போட்டதால், மனமுடைந்த ரமேஷ் 10வது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த பேசின்பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தின்போது, 2வது மனைவியிடம் ரமேஷ் குடிக்க பணம் கேட்டுள்ளதாகவும், அவர் பணம் தர மறுக்கவே அவரை பயம்புறுத்துவதற்காக மேலே இருந்து கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ரமேஷின் முதல் மனைவி சித்ரா, தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்து விட்டார்கள் என பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: