சின்னசேக்காடு அரசு பள்ளிக்கு ரூ.2.50 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள்: எம்பி அடிக்கல் நாட்டினார்

திருவொற்றியூர்: மணலி சின்னசேக்காடு பகுதியில் அரசு பள்ளிக்கு, ரூ.2.50 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை கலாநிதி வீராசாமி எம்பி தொடங்கி வைத்தார். மணலி சின்னசேக்காடு பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் இல்லாததால் இடநெருக்கடியால் சிரமப்பட்டனர்.

எனவே, இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பாறைகள் கட்டித் தர வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் தீர்த்தி, சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மாநில அரசு ரூ.1.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதேபோல், எண்ணூர் துறைமுகம் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்தது. மொத்தம் ரூ.2.52 கோடி செலவில் உயர்நிலைக்கு பள்ளிக்கு 9 வகுப்பறைகளும், தொடக்கப் பள்ளிக்கு 3 வகுப்பறைகளும் கட்ட திட்டமிட்டு இதற்கான பூமிபூஜை பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமை வகித்தார்.

கலாநிதி வீராசாமி எம்பி, காமராஜர் துறைமுக துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல இணை ஆணையர் சிவ குருபிரபாகரன், மணலி மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், கவுன்சிலர் தீர்த்தி, கிராம நிர்வாகி அருணாச்சலம், திமுக நிர்வாகிகள் கரிகாலசோழன், சாலை கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: