இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம் சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

அண்ணாநகர்: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (35, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த 22ம் தேதி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது 13 வயது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில்,  திடீரென அவளை காணவில்லை. எனவே, அவளை கண்டுபிடித்து தர வேண்டும், என கூறி இருந்தார். போலீசார், சிறுமி வைத்திருந்த செல்போன் சிக்னலை கண்காணித்தபோது, மாமல்லபுரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று, அங்குள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஒரு விடுதியில் அந்த சிறுமி, வாலிபர் ஒருவருடன் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், இருவரையும் சூளைமேடு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த துளசிதரன் (24) என்பதும், இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒருவருடமாக சிறுமிக்கும், துளசிதரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியதும்,  கடந்த 22ம் தேதி மாமல்லபுரத்துக்கு சிறுமியை  கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.  

இதையடுத்து, சிறுமி வழக்கு என்பதால், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  இந்த வழக்கை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, துளசிதரனை கைது செய்து, சென்னை  உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: