பழம்பெரும் நடிகை ஜமுனா மரணம்

ஐதராபாத்: பழம்பெரும் நடிகை ஜமுனா நேற்று காலமானார். அவருக்கு வயது 86. ஜமுனா, 16 வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். 1953‍ல் `புட்டிலு’ தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். எல்.வி.பிரசாத்தின் `மிஸ்ஸம்மா’ திரைப்படத்தில் நடித்த பிறகு இவர் புகழ்பெற்றார். கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ்- கவுசல்யா தேவி ஆகியோருக்கு பிறந்தவர் ஜமுனா. ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலாவில் வளர்ந்தார். நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார்.

அதனால் சாவித்திரி, ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஜமுனா, அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமுந்திரி மக்களவை தொகுதியில் 1989ல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாஜவில் இணைந்து அக்கட்சிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இவர், தங்கமலை ரகசியம், நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு, மருத நாட்டு வீரன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, மனிதன் மாறவில்லை, தூங்காதே தம்பி தூங்காதே, பூமி கல்யாணம், மிஸ்ஸம்மா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்திலுள்ள வீட்டில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர், நேற்று அதிகாலை காலமானார்.

Related Stories: