அண்ணாசாலையில் பழைய கட்டிடத்தை அகற்றிய போது விபரீதம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஐடி பெண் ஊழியர் நசுங்கி பலி: 2 பேருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை; பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது

சென்னை: அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடித்தபோது, சாலையோரம் நடந்து சென்ற ஐடி நிறுவன பெண் ஊழியர் மீது எதிர்பாராதவிதமாக சுவர் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி முருகேசன் என்பவரின் மகள் பத்மபிரியா (22). எம்சிஏ பட்டதாரியான இவர், சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்தார். ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் பத்மபிரியா, சென்னை அருகே உள்ள பம்மல் பகுதியில் தனது சித்தி வீட்டில் தங்கியிருந்து தினமும் மெட்ரோ ரயில் மூலம் வேலைக்கு வந்து சென்றுள்ளார்.

அதன்படி, நேற்று காலை 9 மணி அளவில் மெட்ரோ ரயில் மூலம் பத்மபிரியா வேலைக்கு வந்தார். அண்ணா சாலை பழைய ஆனந்த் திரையரங்கம் அருகே உள்ள சுரங்கப்பாதை வழியாக வந்து தனது அலுவலகம் நோக்கி சாலையோர நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். பழைய ஆனந்த் திரையரங்கம் அருகே, சையது அலி பாத்திமா என்பவரின் சுற்றுச்சுவருடன் கூடிய பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி இரவு பகலாக நடந்து வந்தது. இந்த பணியில் பொறியாளர் ஷேக் பாய் மற்றும் ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமான் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் 6 அடி உயர சுற்றுச்சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணி நேற்று காலை நடந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து சாலையோரம் நடைபாதையில்  சென்ற பத்மபிரியா மற்றும் வாலிபர் விக்னேஷ் குமார் (28), மற்றொரு பெண் மீது விழுந்தது.

இதில் பத்மபிரியா உள்பட 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். சுவர் இடிந்ததும், சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் கட்டிடம் இடிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கிய பத்மபிரியாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆயிரம்விளக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலகட்ட போராட்டங்களுக்கு இடையே பத்மபிரியா, விக்னேஷ்குமார் உள்பட 3 பேரை மீட்டனர்.  ஆனால், பத்மபிரியா மட்டும் ரத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்தார். உடனே ஆம்புலன்ஸ் உதவியுடன் பத்மபிரியாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பத்மபிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், பலத்த காயமடைந்த வாலிபர் விக்னேஷ்குமார், மற்றொரு பெண் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஆயிரம்விளக்கு போலீசார் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் கட்டிடம் இடித்ததாக வீட்டின் உரிமையாளர் சையது அலி பாத்திமா, கட்டிடம் இடிக்கும் பணியில் ஈடுபட்ட பொறியாளர் ஷேக் பாய், ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமான் மற்றும் பொக்லைன் இயந்திரத்தின் உரிமையாளர் ராமாபுரத்தை சேர்ந்த ஞானசேகரன், பொக்லைன் ஓட்டுனர் பாலாஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கவனக்குறைவாக பணியில் ஈடுபட்டதாக பொக்லைன் உரிமையாளர் ஞானசேகரன், ஓட்டுனர் பாலாஜி ஆகியோரை போலீசார் நேற்று மாலை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளர் சையது அலி பாத்திமா, பொறியாளர் ஷேக் பாய், ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆயிரம்விளக்கு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: